Share on Social Media


‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை 2021 ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தியிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் எனவும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவை உறுதிசெய்ய மாநிலங்கள் கேட்கும் கூடுதல் தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேசிய தகவல் மையத்துடன் (என்.ஐ.சி) கலந்தாலோசித்து அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோரைப் பதிவு செய்வதற்காக இணையதளத்தை உருவாக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த இணையதளம் உருவாக்கும் பணிகளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அமைப்புசாரா, புலம்பெயர் தொழிலாளர்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக சமையலறைக் கூடம் அமைத்து உணவு வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற திட்டத்திற்குப் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆங்காங்கே சில மாநிலங்கள் அந்தத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ள மாநிலங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்திலும் இன்னும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படாத சூழலில் தமிழ்நாடு அரசு இதை எப்படிக் கையாளப் போகிறது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

‘ஒரே நாடு ஒரேரேஷன்’ திட்டத்தில் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமனிடம் கேட்டோம் “ ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை ஏற்கவில்லை எனத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஏற்கெனவே அ.தி.மு.க அரசு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. ஆனால், தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசிடம் இதை ஏற்பதா வேண்டாமா என்ற எந்தத் தெளிவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது புலம்பெயர் தொழிலாளர்களை மையமிட்டு மட்டுமே என்பதுதான் ஒன்றிய அரசு முதல் உச்சநீதிமன்றம் வரை பார்க்கும் விஷயம். அதுவும் ரேசன் என்ற அடிப்படையில் மட்டுமே வைத்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், அதில் நமக்கு மறுப்பில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் முறையாக இருக்கும் ரேஷன் திட்டத்தைச் சிதைப்பதுதான் இதன் உள்நோக்கம் என்பதால்தான் எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலத்திலும் எல்லா ரேஷன் கடைகளிலும் எல்லா நேரத்திலும் அனைத்தும் கிடைக்கிறது என்ற சூழல் உருவாகும்போதுதான் இதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாடு, கேரளா, உத்தரகாண்ட் இங்கு மட்டுமே ரேஷன் என்ற திட்டமே முறையாகச் செயல்படுகின்றன. பல மாநிலங்களில் ரேஷன் கார்டுகள் வெறும் அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இது நடைமுறைச் சிக்கல். பா.ஜ.க வலுவாக இல்லாத மாநிலங்களில் புலம்பெயர்த் தொழிலாளர்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான இனச் சமநிலைப்படுத்துவது என்ற அரசியல் நோக்கம்தான் இதன் அடிப்படையே.

கி.வெங்கட்ராமன்

கி.வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அது எங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுக்கலாம். சட்ட ரீதியில் கூட அதில் எந்தச் சிக்கலும் இல்லையே. ‘எங்களின் மாநில உரிமை மீறுவதாக இருக்கிறது. இதனால் எங்கள் மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதை எதிர்க்கிறோம்’ எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசோ, நீதிமன்றமோ அறிவிக்கும் எந்த முடிவையும் மாநிலங்கள் எதிர்க்கலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தெளிவாக இல்லை என்பதால் என்ன முடிவு எடுப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை” என தமிழ்நாடு அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கினார்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தி.மு.க அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற தி.மு.க செய்தித்தொடர்பாளர் டி.கே.ஸ் இளங்கோவன் எம்.பி-யிடம் முன்வைத்தோம் “இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. எல்லா வீடுகளுக்கும் ரேஷன் அட்டை இருக்கிறது, தமிழ்நாடு மக்கள் அனைவரும் இன்று ரேஷன் கடைகளும் மூலம் பயனடைகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது வெள்ளை, மஞ்சள், கவுர அட்டைகள் என பல வண்ணங்களில் அறிமுகம் செய்தபோது அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அந்தத் திட்டத்தையே பின்னர் அவர் கைவிட்டுவிட்டார். ஆனால், மற்ற மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்கள் பிற மாநிலத்திற்குச் செல்லும் போது அட்டை வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே பொருட்களை வழங்குவார்களா அல்லது வருவாயை வைத்து ரேஷன் பொருட்கள் கொடுப்பார்களா?

டி.கே.எஸ். இளங்கோவன்

டி.கே.எஸ். இளங்கோவன்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் ’ பல குழப்பங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றைச் சரி செய்து எப்படி நிறைவேற்றுவது என மாநிலங்களைக் கலந்தாலோசித்து அதன்பின் செயல்படுத்தினால் இந்தத் திட்டம் மக்களைப் போய்ச்சேரும். இல்லையென்றால் குழப்பம்தான் மிச்சமாகும். இதுவரை தமிழ்நாடு அரசு எந்த அறிவிப்பும் வெளிவர வில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர விசாரித்துச் சிக்கலுக்கு உரியத் தீர்வோடு இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவார். மக்களுக்கு விரோதமாக இருக்கும் எதையும் செய்யமாட்டோம் என்பது மற்றும் உறுதி” என ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *