Share on Social Media


கடந்த இரண்டு வாரமாகத் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அரசு எதிர்பார்த்த அளவிற்குப் பலனளிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலும் கட்டுக்குள் வரவில்லை. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மக்கள் விடுமுறைபோல எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டு சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் அதற்குக் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். தளர்வுகள் ஏதும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் (மே.24 – 30) அடுத்த ஒருவார காலத்திற்குக் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (மே.22), ஞாயிறு (மே.23) இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும். மக்களுக்கு தங்களுக்கு அடிப்படை தேவைகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது என்று அறிவித்திருந்த போதும் கூட்டமாக மக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்த ஒருநாள் தளர்வால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத்தான் செய்யும் எனப் பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகிக்க வணிகர் சங்கங்களுடன் இணைந்து அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் வணிகர் சங்கங்கள் சார்பில் 2,000, தோட்டக்கலைத் துறை சார்பில் 600, கூட்டுறவுத் துறை சார்பில் 35 வண்டிகள் என மொத்தம் 2,635 வாகனங்களில் 105 ரூபாய்க்கான காய்கறித் தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இதேபோல விலையேற்றமில்லா காய்கறி விற்பனைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிகத் தீர்வுதான் என்றாலும் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு விலை உயர்வில்லா காய்கறி விற்பனை எந்த அளவுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனிடம் பேசினோம்

“கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் பொருளாதாரரீதியில் எந்த நெருக்கடிக்கும் ஆளாகக் கூடாது என்பதற்காக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்து முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கியிருக்கிறது தி.மு.க தலைமையிலான அரசு. அடுத்த தவணைத் தொகையும் விரைவில் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதிதான் தளர்வுகளற்ற ஊரடங்கையும் அரசு அமல்படுத்தி வருகிறது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்தும் பொருட்டுதான் வீடுகளுக்கே சென்று விலை உயர்வில்லாத காய்கறித் தொகுப்பைக் கொடுக்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தியுள்ளது. இதனால் அரசுக்குக் கொஞ்சம் நிதிச் சுமை ஏற்படும் என்றாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதை உணர்த்து திட்டமிட்டே இம்மாதிரியான திட்டங்களைச் செய்துவருகிறார்கள். காய்கறி வியாபாரிகளிடம் சென்று நேரடியாக சந்தையில் வாங்கித்தான் மக்களுக்குக் கொடுத்து வருகிறது. விற்பனையை அரசு முறைப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்க வழி செய்துள்ளது அரசு. சேமித்து வைக்கக் கூடிய பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்வதற்குத்தான் நேற்று ஒருநாள் தளர்வுகளை விடுவித்தது தமிழக அரசு. ஆனால், காய்கறிகளை, பழங்களை அப்படிச் சேமித்து வைக்க முடியாது. மற்றெல்லாத்தையும் விடக் காய்கறி மிக மிக அத்தியாவசியம் என்பதால் அதை அரசு நெறிப்படுத்தி விற்பனை செய்கிறது.

டி.கே.எஸ் இளங்கோவன்

டி.கே.எஸ் இளங்கோவன்

வியாபாரிகளுடன் இணைந்துதான் இதைச் செயல்படுத்துகிறது என்பதால் அடுத்து ஊரடங்கை நீட்டித்தாலும் தொடர்ந்து இதே விலையில் அரசால் நிச்சயம் காய்கறி விநியோகம் செய்ய முடியும். மக்கள் நலனுக்காகத்தான் ஊரடங்கு. அக்காலத்தில் மக்கள் வெளியே வராமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்து தி.மு.க அரசு செயல்படுத்தும். அதில் எந்த தடங்கலும் வராது” என்றார்.

தமிழக அரசின் நடவடிக்கை குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் “சென்ற வருடம் இதுபோன்ற ஊரடங்கு வரும்போது தி.மு.க-வினர் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நாம் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். காய்கறிகளை நடமாடும் வாகனங்கள் மூலம் அரசே கொடுப்பது என்பது இயலாத காரியம். ஏனெனில் அதற்கு உண்டான கட்டமைப்பு தமிழக அரசிடம் இல்லை. காய்கறி கடைகளை வைக்கக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்று சொல்லியிருப்பது திட்டமிடாத, திட்டமிடத் தெரியாத அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. நேற்று இந்த அறிவிப்பு வந்தவுடன் காய்கறியின் விலை பலமடங்கு உயர்ந்து ஏழை, எளிய மக்களை மிகப்பெரிய கஷ்டத்தில் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. ஊரடங்கு காலத்திலும் காய்கறி கடைகள் இயங்கும் என்று உடனடியாக அரசு அறிவித்து அத்தியாவசிய பொருளான காய்கறி பெறுவதற்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடரை அரசு தீர்க்க வேண்டும். ஊரடங்கினால் தடுப்பூசி செலுத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது அதற்கும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

இதற்குத் தேவையான வசதி இருக்கிறது என்று சொன்ன அரசு தற்போது தனியாரும் பங்கெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. அதற்குப் பதிலாகக் காய்கறிக் கடைகள் இயங்கலாம் என அறிவித்துவிடலாமே. அதைத்தானே நாமும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். காய்கறி விற்பனையில் தனியாரும் பங்கு பெறலாம் என்று அரசு முன்னரே அறிவித்திருந்தால் காய்கறி விலை இவ்வளவு அதிகரித்திருக்காது. அதற்காக மக்களும் அதிகளவில் கூடியிருக்க மாட்டார்களே. இது அரசின் பொறுப்பற்ற செயல் என்றுதான் பார்க்க முடியும்” எனக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *