Share on Social Media


தனுஷ் என்ற அசாத்திய நடிகனுக்கு முக்கியமான பாத்திரம் கே.பி.கருப்பு. தனுஷின் திரைவாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை அவர் தன் நடிப்பையும் உடல்மொழியையும் மாற்றிக்கொண்டு வந்திருப்பதைக் கவனிக்கலாம். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ தனுஷ் வேறு, ‘புதுப்பேட்டை’ தனுஷ் வேறு. ஆனாலும் சில தொடக்ககால இயல்புகள் அவரிடம் எஞ்சியிருக்கும். உதாரணத்துக்குத் ‘திவ்யா திவ்யா’ என்று உரத்த குரலில் பேசும் தொனி ‘புதுப்பேட்டை’யிலும் இருக்கும். செல்வியை ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டு, நடக்காத முதலிரவை நடந்ததாகத் தன் சகாக்களிடம் விவரிக்கும் காட்சியில் இதை உணரலாம். ஆனால் ‘பொல்லாதவன்’ தனுஷ், முற்றிலும் சட்டை உரித்த பாம்பு. அந்தப் படத்தில் உடல்மொழி, முகபாவனைகள், வசன உச்சரிப்பு எல்லாவற்றையும் மாற்றியிருப்பார்.

‘ஆடுகளம்’ தனுஷோ ‘பொல்லாதவன்’ தனுஷைவிட முற்றிலும் மாறுபட்டவர். இந்த மாற்றங்கள்தான் பல்வேறு சாதனைகளைத் தனுஷின் தோள்களில் கொண்டுவந்து கிடத்துகின்றன. மதுரையைச் சேர்ந்த ஒரு வெள்ளந்தி இளைஞன், அவனுக்கு சேவல் சண்டையும் குரு பேட்டைக்காரனும்தான் உலகம். இதற்கிடையில் நண்பர்கள், அவர்கள் ‘லந்து’ மற்றும் ஐரீன் காதல். இப்படி ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக்காட்ட தனுஷ் என்ற கலைஞனால்தான் முடியும். ‘அண்ணே’ என்ற அன்பூறும் வார்த்தை மதுரை மண்ணின் அடையாளம். இறுதிவரை தன் குருவை நம்பி ஏமாறும் அப்பாவி இளைஞன் வேடத்தில் அச்சு அசல் பொருந்தியிருப்பார். உண்மையில் இது தனுஷ் நடிப்புலகத்துக்கான ‘ஆடுகளம்’.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *