Share on Social Media


அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் தலைமையில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க அவைத்தலைவராகச் செயல்பட்டுவந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

அவைத் தலைவர் தேர்வைத் தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில், 11 தீர்மானங்கள், 1 சிறப்பு தீர்மானம் மற்றும் 1 இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பார்க்கலாம்:-

தீர்மானம் 1

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் இதயதெய்வம் டாக்டர் எம்.ஜி.ஆர் கண்ட மகத்தான மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும், பட்டி தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு!

தீர்மானம் 2

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 இடங்களையும், கழகக் கூட்டணி கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டுகள். கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்து உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தீர்மானம் 3

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொது மக்களுக்கு அளித்து, ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க-வின் நேர்மையற்ற பிரசாரம் முறைகளுக்கு கண்டனம்!

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

தீர்மானம் 4

ஏழை எளிய உழைக்கும் மக்கள் பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாய் நிறைவேற்றுவதாக கூறிய தி.மு.க அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாக தெரிவிக்க வலியுறுத்தியும், அப்படி தெரிவிக்காவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை!

தீர்மானம் 5

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளைகள், வழிப்பறி சம்பவங்கள், போலீஸாருக்கே பாதுகாப்பற்ற நிலை, வணிகர்கள் மீது தாக்குதல்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க அரசு முன்வர வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம்!

தீர்மானம் 6

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் லட்சக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அதன் காரணமாகவும், வாழை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகளுக்கும், மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து இருக்கும் வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க அரசை வலியுறுத்தி மழை வெள்ள பாதிப்புகளை முன்னேற்பாடுகள் மூலம் தடுக்க தவறிய தி.மு.க அரசுக்கு கண்டனம்!

தீர்மானம் 7

மழை வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் துயர்துடைக்க தி.மு.க அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *