Share on Social Media


புதுடில்லி: ஒமைக்ரான் தொற்றால் பீதியடைய தேவையில்லை என்றும் மருத்துவமனையில் ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டில்லியில் மட்டும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். டில்லியில் கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து பீதியடையத் தேவையில்லை. மருத்துவமனைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. கோவிட் தொற்றின் லேசான மாறுபாடு தான் ஒமைக்ரான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் ஆகியவை மிகவும் குறைவாகவே உள்ளன.

கடந்த சில நாட்களாக டில்லியில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று (டிச.,19) பாதிப்பு 100ஐத் தாண்டியது. இவை சாதாரணமானவையா அல்லது ஒமைக்ரான் மாறுபாடா என்று தெரியவில்லை. எனவே இதை அறிய டில்லியில் கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்படும் அனைத்து மாதிரிகளும் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *