விருதுநகரில் பணிகள் முடிவுற்ற நிலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் பார்வையிட்டனர். மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்புகள், மாணவர்களின் வகுப்பறை, உணவுக்கூடம், தங்கும்விடுதி ஆய்வகங்களை ஆய்வு செய்தனர். அடுத்த மாதம் தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் தமிழகம் வர வாய்ப்பிருப்பதால், அவர் வந்து இறங்கக் கூடிய ஹெலிகாப்டர் தளங்களையும், அவர் செல்லக்கூடிய பாதைகளையும் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். தற்போது வரை தமிழகத்தில் 69 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயிலும் அளவிற்கு கட்டமைப்புகள் தயாராக இருக்கிறது. இந்தியா முழுவதும் 8 மருத்துவருக்கு 1 மருத்துவர் தமிழகத்தில் பயின்ற அல்லது தமிழக மருத்துவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்போது 1,450 மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில்வார்கள்” என்றார்.