Share on Social Media


* ஒன்றிய அரசு அனுப்பியுள்ள தடுப்பூசிகளை விட தமிழகத்தில் போட வேண்டிய எண்ணிக்கை அதிகம்.
* தமிழகத்தில் 1000 பேருக்கு 302 என்ற அடிப்படையில் தான் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
* குஜராத், ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கு 533, 446, 493 என்று வழங்குகிறது.

சென்னை: சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்திற்கு 1 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தொற்று 2வது அலையை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள யாரும் முன்வராத நிலையில், அரசின் விழிப்புணர்வுக்கு பிறகு தற்போது, ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி  வருகின்றனர். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், இதுவரை 20 லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிகள் தான் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இதனால்  தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது எனக் குறிப்பிட்டு, தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும், தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக கோவிட்-19 தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு, நான் கடந்த மே 25ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன். குறிப்பாக  தமிழகத்துக்கு குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளேன். தற்போதைய ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் உள்ள மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் போட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி 29 லட்சத்து 18 ஆயிரத்து 110 தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது. அந்த ஊசிகள் 18 முதல் 44 வயதுள்ளவர்களுக்காகவும், 1 கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 440 தடுப்பூசிகள் 45 வயதுள்ளவர்களுக்காகவும் வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட வேண்டிய நிலை உள்ளது. ஒன்றிய அரசு அனுப்பியுள்ள தடுப்பூசிகள் அதற்கேற்ப போதுமானதாக இல்லை.

கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துள்ள கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் வெற்றியை அளித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி போட வேண்டும் என்று தீவிர பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.  உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், ஒன்றிய அரசின் சுகாதார துறையின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அந்தந்த மாநில  மக்கள் தொகைக்கு ஏற்ப  தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தது. அதில் 18 முதல்  44 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஒதுக்கீடு இருக்கும் என்றும் கூறியிருந்தது. இருந்தபோதிலும்,  ஒன்றிய அரசு மனுவில் தெரிவித்தபடி, மேற்கண்ட எண்ணிக்கைக்கு  ஏற்ப தமிழத்துக்கு தடுப்பூசி  வழங்கப்படவில்லை. ஆயிரம் பேருக்கு 302 என்ற எண்ணிக்கை என்ற அளவில்தான் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவானது. குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களுக்கு  வழங்கப்பட்டதை விட  குறைவு.

அங்கு 1000 பேருக்கு முறையே 533, 446, 493 என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதனால் தனிப்பட்ட முறையில் தாங்கள்  கவனம் செலுத்தி, தமிழகத்திற்கான பற்றாக்குறையை போக்கும் வகையில் உடனடியாக சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்திற்கு  1 கோடி தடுப்பூசிகளை  வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *