Share on Social Media


ஒன்றியம் எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல்,  மம்தா பானர்ஜியைப்போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அதிமுகவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து அதன் விளைவாக ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு பாஜக இட்ட பாதையில் செல்வதும், அவர்களை மென்மையானப்போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

நாட்டின் பன்முகத்தன்மையை முற்றாகச் சிதைத்தழித்து, ஒற்றைமயத்தை முற்றுமுழுதாகக் கட்டியெழுப்பி அதிகாரப்பரவலையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குலைத்து, தேசிய இனங்களை, ‘இந்து’ எனும் மாய வலைக்குள் வீழ்த்திட முயலும் பாஜகவை வலிமைகொண்டு மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யாது, பாஜக செய்யும் அரசியலுக்குள் கரைந்துபோகும் திமுகவின் செயல்பாடுகள் யாவும் வழமையான பிழைப்புவாதமாகும்.

இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி திமுக அரசு, பாஜகவை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கெதிராக நாடெங்கிலும் எழுந்த எதிர்க்கட்சிகளின் அணிச்சேர்க்கையை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முந்திக்கொண்டு அறிவித்து முறியடித்த ஐயா ஸ்டாலின், தற்போது அதன் நீட்சியாகவே பாஜகவை பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உயரடுக்குப் பாதுகாப்பில் இருக்கும் எத்தனையோ பேர் வந்ததே தெரியாமல், தமிழகத்திற்கு வருகைப் புரிந்துவிட்டுத் திரும்பும்போது மோகன் பகவத்துக்கு மட்டும் இப்பேர்பட்ட சிறப்புச்சலுகை எதற்காக? சமூக வலைத்தளங்களில் உத்தரவுக்கடிதத்தின் நகல் வெளியாகி எதிர்ப்பினையும், கண்டனத்தினையும் எதிர்கொண்ட பிறகு, வேறு வழியின்றிதானே அரசியல் நெருக்கடி காரணமாக உத்தரவுக்கடிதம் அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இல்லாவிட்டால், சேவா பாரதியை சத்தமின்றித் தலைமைச்செயலகத்திற்கு அழைத்ததுபோல மோகன் பகவத்துக்கு எல்லா மரியாதையும் செய்தல்லவா அனுப்பியிருப்பார்கள்? இப்போதும் என்ன குறைவு? அதிகாரியைக் கண்துடைப்புக்கு நீக்கிவிட்டு, மோகன் பகவத்தின் வருகைக்கு எவ்விதக்குறையும் வைக்காதுதானே நடத்தினார்கள்?

நாளை ஐயா ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்குச் சென்றால் இதேபோலச் சாலைகளைச் சீரமைத்து, தெருவிளக்குகளைப் பராமரித்து இவ்வளவு மரியாதையும், முன்னுரிமையும் வழங்கப்படுமா? தமிழக முதல்வர்கள் யாருக்காகவாவது டெல்லியில் அப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை! இனியாவதுதான் வழங்கப்படுமா? இத்தகைய புறச்சூழல் இருக்க மோகன் பகவத்துக்கு எதற்கு அவ்வளவு முதன்மை வசதிகள்? அவர் ஒரு அமைப்பின் தலைவர் என்பதைத்தாண்டி, அவருக்கான சமூக அங்கீகாரமென்ன? அவரென்ன தேச விடுதலைப்போராட்ட வீரரா? தேச விடுதலைக்கே எவ்விதப் பங்களிப்பையும் செய்யாது வெள்ளையர்களின் அடிவருடிகளாகச் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்தானே, அத்தகைய பின்புலம் கொண்டவரைக் கொண்டாடுவதற்கு என்ன தேவையிருக்கிறது? அதுவும் ஆரியத்தை ஆதிமுதல் எதிர்த்து வரும் தமிழர் நிலத்தில் இவரை வரவேற்று உபசரிக்க என்ன அவசியம் வந்தது? பதில் சொல்வாரா ஐயா ஸ்டாலின்?

எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது 161-வது சட்டப்பிரிவின்படி மீண்டும் தீர்மானம் இயற்றியோ எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டிய திமுக, அது எதனையும் செய்யாது, தனக்கு அதிகாரமில்லை எனும் ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான கூற்றை ஏற்பதுபோல, ஒப்புக்கு குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி அனுப்பிவிட்டால் போதுமா? அந்தக் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்தபோது ஐயா கருணாநிதியின் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்து வைக்க அழைப்புவிடுத்த ஐயா ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஒருவார்த்தைகூடப் பேசாததன் மூலம் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் அனுப்புவது வெற்று நாடகம் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்தானே?

நீட் தேர்வு, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், நியூட்ரினோ என தமிழகத்தின் முதன்மைச்சிக்கல்கள் யாவற்றிலும் பாஜக நினைப்பதே நடக்கிறதே அது எப்படி? இதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா? இதுதான் மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டும் அண்ணாவின் வழிவந்த ஆட்சியா?
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் ஜவாஹிருல்லாவே காவல்துறையினரிடம் புகாரளித்தும், அது இரு சமூகங்களிடையே பிளவை உண்டாக்க முனைகிறது என எச்சரித்தும் அந்தப் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

ஆகவே, இனிமேலாவது, ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும்  மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும் எனவும், மோடி அரசின் நாசகாரத்திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டைப் பேணிக்காத்து மாநிலத்தின் மண்ணுரிமையையும், தன்னுரிமையையும் நிலைநிறுத்த வேண்டுமெனவும் மாநிலத்தை ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Tamil News SpotThanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *