Share on Social Media


வாஷிங்டன்: சமூக வலைதள சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி சிறிய போட்டி நிறுவனங்களை நசுக்கி வருவதாக பேஸ்புக் மீது அமெரிக்க அரசும், அதன் 48 மாகாண அரசுகளும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. சமூக வலைதளங்களில் பிற நிறுவனங்களை விட பேஸ்புக் அதிகளவில் கோலோச்சி வருகிறது. அது சந்தையில் தனக்கிருக்கும் தனிப்பட்ட பயனாளர்கள் செல்வாக்கை பயன்படுத்தி இதர சிறிய போட்டி நிறுவனங்களை முடக்கி வருவதாக  கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அரசின் மத்திய வர்த்தக ஆணையம், 48 மாகாணங்களின் அரசு தலைமை வழக்கறிஞர்களும் பேஸ்புக் மீது இதே குற்றச்சாட்டின் பேரில், ஒரே நேரத்தில்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்  தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிட்ட சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெடீசியா ஜேம்ஸ் தலைமையிலான இருகட்சிகளின் கூட்டணியினர் கூறுகையில், “தனது  ஏகாதிபத்தியத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு பல உத்திகளை கையாண்டு ஒழித்துள்ளது. இதற்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் விதி விலக்கல்ல. தனக்கு நிகரான போட்டியாளராக வளர்ந்து வந்த  இன்ஸ்டாகிராமை 2012லும், வாட்ஸ் அப் குறுஞ்செய்தி செயலியை 2014லும் விலைக்கு வாங்கியது. மென்பொருள் வல்லுனர்கள் மீதும் போட்டி நிறுவனங்களை காட்டிலும் சிறந்த சாப்ட்வேரை மேம்படுத்தும் நிபந்தனையை திணிக்கிறது,’’ என்று  தெரிவித்தனர். மத்திய வர்த்தக ஆணையம் அளித்த புகாரில், “கடந்த சில ஆண்டுகளாகவே, பேஸ்புக் நிறுவனம் போட்டியாளர்களை சரிகட்டி வருகிறது.

இதனால், பயனர்களின் அந்தரங்க சமூக வலைதள பயன்பாட்டிற்கு சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும்  சூழலை உருவாக்கி உள்ளது. பயனாளர்களின் உதவியால், விளம்பரத்தின் மூலம் ஈட்டப்படும் செலவிலேயே, புதிதாக உருவாகும் சிறிய சமூக வலைதள போட்டி நிறுவனங்களை பேஸ்புக் நசுக்கி விடுகிறது,’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை விலக்கவும், மென்பொருள் உருவாக்குநர்கள் மீது நிபந்தனை விதிப்பதை தடை செய்வதுடன் பேஸ்புக் நிறுவனம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நிரந்தர தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வருவாய்  5.18 லட்சம் கோடி
பேஸ்புக் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மகத்தான லாபம் ஈட்டி வருகிறது. கடந்தாண்டு மட்டும் பேஸ்புக் ரூ.5,18,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் லாபம் மட்டும் ரூ.1,36,900 கோடியாகும்.

பாதுகாப்பு அமைச்சருக்கு விதி விலக்கு அளியுங்கள்
அமெரிக்காவில், ராணுவ அமைச்சராக பதவியேற்பவர், ராணுவத்தில் இருந்து விலகி குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தற்போது ராணுவ அமைச்சராக பிடன் பரிந்துரைத்துள்ள ஆஸ்டின்,  41 ஆண்டு கால ராணுவ சேவையில் இருந்து, கடந்த 2016ம் ஆண்டுதான் ஓய்வு பெற்றுள்ளார். அவர் பதவி விலகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், அவரால் ராணுவ அமைச்சராக முடியுமா? என்பது சந்தேகமே. இதனால், இந்த சட்டத்தில்  இருந்து ஆஸ்டினுக்கு விலக்கு அளிக்கும்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிடென் கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தை நாடினார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரியளவில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி வரும் டிரம்ப், `ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள 62 எலக்டோரல் வாக்குகளை  செல்லாது’ என அறிவிக்க கோரி, டெக்சாஸ் மாகாண ஆளுனர் கென் பாக்ஸ்டன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற குழு தலைவராக இந்திய வம்சாவளி பிரமிளா
அமெரிக்காவின் 117வது நாடாளுமன்ற குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிடென் நிர்வாகத்தில் எந்த உறுப்பினர் எந்த கூட்டத்தில் பங்கேற்பது, எதற்கு தலைமை தாங்குவது என்பது  குறித்து முடிவெடுக்கும் அதிகாரமிக்க குழுவில் பிரமிளா இடம் பெற்றுள்ளதன் மூலம், இனவாதத்துக்கு நீதி, வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு, நாட்டின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *