NTLRG 20200926155601736923 Tamil News Spot
Share on Social Media

எஸ்பிபி தமிழில் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?

26 செப், 2020 – 15:56 IST

எழுத்தின் அளவு:


Did-you-know-spbs-first-song

சினிமா இசை ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற எஸ்பிபி முதன் முதலில் தமிழில் பாடிய பாடல் எது தெரியுமா ?. பலரும் ஆயிரிம் நிலவே வா பாடல் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல். அந்தப் பாடல் வெளிவரவேயில்லை. தான் முதன்முதலில் தமிழில் பாடிய அனுபவத்தைப் பற்றி ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி கூறியிருக்கிறார்.

“நான் தெலுங்குல பாடிட்டிருக்கும் போது பரணி என்கிற ஒரு பப்ளிசிட்டி டிசைனர் என்கிட்ட ஏன் தமிழ்ல பாட மாட்டேன்னு கேட்டாரு. இல்லை, எனக்குத் தமிழ் சரியா வராது, எல்லாரும் என்னை கொல்டின்னு சொல்றாங்க, அதான்னு சொன்னேன். அவர்தான் என்னை பரணி ஸ்டுடியோவுல இயக்குனர் ஸ்ரீதர் கிட்ட கூட்டிட்டு போனாரு.

அங்க அவரு என்னை பாடச் சொன்னாரு. நான் பெரிய முகம்மது ரபி பக்தன், இன்னைக்கும்தான். அப்படிப்பட்ட கலைஞனரை நான் பார்த்ததே கிடையாது. அவரோட ஹிந்திப் பாட்டு பாடினேன். அப்ப அங்க மேஜர் சுந்தர்ராஜன் கூட இருந்தாரு, உங்க ஹிந்தி உச்சரிப்பு நல்லா இருக்கேன்னு சொன்னாரு. அதுதாங்க பிரச்சினை, எனக்கு தமிழ் உச்சரிப்பு தெரியாதுன்னு மனசுல நினைச்சிக்கிட்டேன்.

ஸ்ரீதர் சார் பாட்டைக் கேட்டுட்டு, பைனலா ஓகே பண்ண வேண்டியது எங்க ஆசான் விஸ்வநாதன் சார் தான் சொன்னாரு. நாளைக்கு சித்ராலயா ஆபீசுக்கு வாங்க, அங்க ஒரு பாட்டுக்காக ரிகர்சல் நடக்குதுன்னு சொல்லி அனுப்புனாரு.

அங்க போனா, 45 மியூசிஷியன்ஸ் உட்கார்ந்திருக்காங்க, ஒரு வேளை எனக்கு அவகாசம் வந்தால், இத்தனை பேரோட சேர்ந்து பாடணுமான்னு அவ்வளவு பயமா இருந்தது. விஸ்வநாதன் சார்கிட்ட அறிமுகப்படுத்தினாரு. அப்பவும் ஹிந்தி பாட்டுதான் பாடினேன். தமிழ் பாட்டு ஒண்ணும் வராதான்னு கேட்டாரு. எனக்கு ஞாபகம் இருந்த தமிழ் நிலவே என்னிடம் நெருங்காதே பாட்டைப் பாடினேன்.

பாட்டைக் கேட்டுட்டு ரொம்ப நல்லா பாடற, தமிழை நீ இப்படி உச்சரிச்சன்னு வச்சிக்கோ, உன்னையும், என்னையும் தமிழ்நாட்ல கல்லால அடிப்பாங்க. முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வா உனக்கு சான்ஸ் உண்டுன்னு சொன்னாரு.

ரெண்டு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு, போஸ்டர்லாம் பார்த்துதான் கத்துக்கிட்டேன் தமிழ். பரணி ஸ்டுடியோவுல ஒரு நாள் ரெக்கார்டிங் முடிச்சிட்டு நான் வெளிய வரேன், அவர் ரீரிக்கார்ட்டிங் ஒண்ணுக்காக உள்ள வராரு. ரொம்ப பாஸ்ட்டா நடப்பாரு. அவரைக் கும்பிட்டு ஒதுங்கி நின்னேன், நீ பாலசுப்ரமணியம்தானேன்னு கேட்டாரு, ஆமாங்கன்னு சொன்னேன். இரண்டு வருஷமானாலும் ஞாபகம் வச்சிக்கிட்டு கேட்டாரு.

ஏன் என்னைப் பார்க்கலன்னு கேட்டாரு, இல்லை தமிழ் நல்லா வரலை அதான்னு சொன்னேன். இப்ப தமிழ் நல்லா இருக்கே, நாளைக்கு ஒரு இடத்துக்கு வான்னு சொன்னாரு.

மறு நாள் போனேன். ஹோட்டல் ரம்பான்னு ஒரு படம். அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு, அட, இத்தனை நாளா இந்த சுகம் இல்லை, நித்திரையும் வீணாச்சு,”ன்னு நானும் எல்ஆர் ஈஸ்வரியம்மாவும் சேர்ந்து பாடினோம். அந்தப் படம் வெளிய வரலை.

தமிழ்ல நம்ம சகுனம் என்னடா இப்படி இருக்கேன்னு நினைச்சேன். அது முடிஞ்சதுக்கப்புறம் சாந்தி நிலையம் படத்துல இயற்கை என்னும் இளைய கன்னி, பாட்டு கோல்டன் ஸ்டுடியோவுல ரிக்கார்ட்டிங் ஆச்சி.

எனக்கு முதல் பேமென்ட் செக் 500 ரூபாய் கொடுத்தாங்க. 500 ரூபாய் என் வாழ்க்கையில பார்த்ததே கிடையாது. உடனடியா பேங்க் போயி கேஷ் பண்ணிட்டு, நானும் என் பிரண்டு முரளியும் டிரைவ் இன் ரெஸ்ட்டாரென்ட் போயி, குலோப்ஜாமூன், மசால் தோசை, காபி சாப்பிட்டு வந்தோம். அதுதான் செலிபிரேஷன்,” என தமிழில் தன் முதல் பாடல் .அனுபவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

எஸ்பிபி பாடிய முதல் பாடலான இயற்கை என்னும் இளைய கன்னி…யில் ஆரம்பித்த அவரது இசைப் பயணம் இந்த இயற்கையில் கடந்த 50 வருடங்களாக இரண்டறக் கலந்துவிட்டது.

பலரும் கூறியது போல இந்த இயற்கை உள்ளவரை, இந்த காற்று உள்ளவரை எஸ்பிபியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *