Share on Social Media


‘இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை’ என்ற ரீதியில் தமிழக சட்டசபைக்குள் எப்படியாவது இந்த முறை தங்களது கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலரையாவது அனுப்பி வைத்துவிடவேண்டும் என்ற அஜெண்டாவுடன் களமிறங்கிய பாஜகவுக்கு, அதிமுக ஒதுக்கிய 20 தொகுதிகளில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் (தனி) தொகுதி. 1951 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டு வரை இத்தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் வெற்றி பெற்ற நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 5 முறையும், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ் காளிமுத்து 83,538 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. பொன்னுசாமி 73,521 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

இந்த முறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் களமிறங்கியதால், தமிழக அளவில் கவனம் ஈர்த்துள்ளது தாராபுரம் தொகுதி. முருகனுக்குத் தேர்தல் களம் புதிதல்ல. கடந்த 2006 ஆம் ஆண்டில் சங்ககிரி தொகுதி, 2011-ல் ராசிபுரம் தொகுதி, அதே ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என மூன்று முறை போட்டியிட்ட போதிலும் தோல்விதான் கிடைத்தது. ஆனால் இந்த முறை நிலைமை வேறு. தமிழக பாஜக தலைவர் என்ற அறிமுகம், பலம் பொருந்திய கூட்டணி கட்சியான அதிமுகவின் ஆதரவுடன் களமிறங்கி உள்ளார். திமுக சார்பில் கயல்விழி, மக்கள் நீதி மய்யத்தின் சார்லி, அமமுகவின் கலாராணி, நாம் தமிழர் கட்சியின் ரஞ்சிதா, சுயேட்சைகள் 4 பேர் என மொத்தம் 9 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், திமுக – பாஜக இடையேதான் நேரடிபோட்டி காணப்பட்டது.

தாராபுரம் தொகுதியில் பாஜகவுக்கென கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையில், அதிமுக-வின் வாக்கு வங்கியை முருகன் பெரிதும் நம்பி இருந்தார். ஆனால்,தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினரின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவு இல்லை என பாஜக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக வேட்பாளர் கயல்விழி புதுமுகம் என்றாலும், அக்கட்சிக்கே உண்டான வாக்கு வங்கி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலமும் இந்தத் தேர்தலில் முருகனுக்கு பெரும் சவால் அளிப்பதாக இருந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *