Share on Social Media

நான் கிராமத்துப் பெண். அப்பா, அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் ஆலையில் வேலைபார்க்கிறார். அம்மா வயல் வேலைகளுக்குச் செல்வார். வீட்டில் இருந்த இரண்டு பசுக்களும் வாழ்வாதாரத்துக்கு உதவின. மாதக் கடைசியில் கையில் காசில்லாமல் திணறும் மிடில் க்ளாஸ் வாழ்க்கை என்றாலும், சந்தோஷத்துக்குக் குறைவில்லை. நானும் தம்பியும் அரசுப் பள்ளியில் படித்தோம். எனக்கும் அவனுக்கும் 7 வருடங்கள் வித்தியாசம். `எப்படியாச்சும் நல்லா படிச்சிடுங்க… நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்…’ என்று சொல்லியே எங்களைப் படிக்கவைத்தார்கள் எங்கள் பெற்றோர்.

நான் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க, ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் எனக்கு ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட ஏற்படும் பணப் பற்றாக்குறையை எப்படியோ சமாளித்துவிடுவார் என் அப்பா. `அதப்பத்தி எல்லாம் நீ கவலைப்படாத… நல்லா படி… நீயும் தம்பியும் சம்பாதிச்சதும் நம்ம நிலைமை மாறிடும்’ என்று மந்திரம்போல சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. அந்த வைராக்கியத்துடனேயே படித்த எனக்கு, படிப்பை முடித்த உடனேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைகிடைத்தது. என் முயற்சியால், அடுத்த வருடமே சென்னையில் ஒரு எம்.என்.சியில் இன்னும் அதிக சம்பளத்தில் வேலைக்கு மாறினேன். மாதம் கிட்டத்தட்ட 40,000 சம்பளம். அதை என் கைகளில் வாங்கியபோது, இந்த 55 வயதில் என் அப்பா பெறும் அவரின் ஐந்து மாத சம்பளத் தொகை, என் ஒரு மாத சம்பளமா என்றுதான் என் கண்களில் நீர் ஓடியது.

Representational image

Representational image
Pexels

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவ்வளவு பெருமை, மகிழ்ச்சி. `உன் தம்பியும் இப்படி கரை சேர்ந்துட்டா போதும் எங்களுக்கு…’ என்று எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையின் இனிமையான அந்திமக் காலத்தை நோக்கியபடி இருந்தார்கள். இன்னொரு பக்கம், அதே மில் வேலை, அதே மாடு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள் இருவரும். இந்நிலையில்தான், சொந்தத்தில் இருந்து வந்து என்னை பெண் கேட்டார்கள். என் பெற்றோருக்கும் அந்த சம்பந்தம் பிடித்திருந்தது. என் விருப்பத்தையும் கேட்டுவிட்டு, இதுவரையிலான தங்கள் சேமிப்பில் அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்திருந்த நகை 30 பவுனுடன், திருமணச் செலவுகளுக்கு மூன்று லட்சம் கடன் வாங்கி, திருமணத்தை முடித்தனர்.

திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. அப்பா வேலைபார்த்து வந்த ஆலை, கொரோனா பொதுமுடக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க, இப்போது அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. எனவே அப்பாவின் வருமானம் நின்றுபோயுள்ளது. தம்பி பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கிறான். அவனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும். என் அப்பாவுக்கு நான் இப்போது பொருளாதார பலம் கொடுக்க வேண்டியது என் கடமை. ஆனால், என் கணவர் `நீ உன் பெற்றோருக்கு உதவக் கூடாது. அப்படியே உதவ வேண்டும் என்று நினைத்தாலும் அந்தத் தொகையை என்னிடம் சொல்லி, நான் ஒப்புதல் கொடுத்தால்தான் கொடுக்க வேண்டும். மேலும், இது இக்கட்டான சூழலுக்கான உதவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மாதம் மாதம் பணம் கொடுப்பது எல்லாம் கூடாது…’ என்றார். இதை முன்னிட்டு அவருக்கும் எனக்கும் பெரும் விவாதம், சண்டை என்று சென்றுகொண்டிருக்கின்றன நாள்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *