Share on Social Media


மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி, மகிழ்ச்சியை பார்க்கும்போது மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தன்னை முதல்வராக தேர்வு செய்தது சசிகலா அல்ல என்றும், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள்தான் என்றும் முதல்வர் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரம், அரசுப் பணிகள் என பல்வேறு பணிகளில் தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக உங்களை தேர்வு செய்தது சசிகலாதான் என்று கூறப்பட்டது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் கட்சியை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

என்னை முதல்வராக தேர்வு செய்தது சசிகலா அல்ல. அந்த நெருக்கடியான சூழலில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் என்னை ஆதரித்ததால் முதல்வரானேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது வைத்திருந்த நம்பிக்கையை அனைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் நன்கு அறிவர். கட்சிக்கும், தலைமைக்கும் உண்மையாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன். ஜெயலலிதாவின் ஆன்மா என்னுடன் இருந்து ஆட்சியை நிறைவு செய்ய வழிகாட்டியதாக நம்புகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கை அறிவிப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதா?

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயற்கை. ஜனநாயக நாட்டில்பொதுமக்களின் தீர்ப்புதான் இறுதி. எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்படும் நாங்கள், வெற்றி தோல்விக்காக கொள்கையை மாற்றிக் கொண்டதில்லை. அதேபோல்,மக்கள் நலனுக்காக வடிவமைக்கப் பட்ட கொள்கைகளில் இருந்தும் பின்வாங்க மாட்டோம். மக்கள் தேவை அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சிகளில் திமுக குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக உங்களுக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறீர்களா?

கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு பயனளிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியுள்ளோம். எனவே, நிச்சயமாக இந்த முறையும் அதிமுக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நான் சென்ற இடங்களில் எல்லாம் அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் வந்து தங்கள் பெரும்பான்மை ஆதரவை தெரிவிக்கின்றனர்.

உங்கள் கூட்டணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. கட்சிகளின் கொள்கைகள் அடிப்படையில் சில சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தேர்தல்அறிவிக்கப்பட்ட பிறகு, தொகுதிப்பங்கீடு பிரச்சினைகள் விவாதிக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றவை. அதற்கு கட்சி பொறுப்பேற்காது.

பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவில் சிலர் மாற்று கருத்து கூறும்போது, நீங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருதலைபட்சமாக கூட்டணி தொடரும் என அறிவித்தது ஏன்?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தலைமையில் உருவான கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுகவால் தேர்வு செய்யப்படும் முதல்வர் வேட்பாளரே கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளர். இதில் மாற்றுக்கருத்து இல்லை. பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியும் இதை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலைப்போல், தற்போதும் அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிடுமா? அதிமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது நாங்கள் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை கூற இயலாது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னர்தான் முடிவு செய்ய முடியும். அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும்.

உங்களுக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதா?

தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக நாங்கள் இருவரும் இணைந்து கட்சியிலும் ஆட்சியிலும் பணியாற்றி வருகி றோம்.

உங்களது தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் மக்களின் வரவேற்பு குறித்து?

தேர்தல் பிரச்சாரத்துக்காக நான்எங்கு சென்றாலும், மக்களின் எழுச்சியையும் அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியையும் பார்க்க முடிகிறது. அவர்கள் அதிமுக அரசுக்கு மீண்டும் வாக்களிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. பெரும்பான்மை இடங்களில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்.

அதிமுகவும் திமுகவும் தனியார் தேர்தல் ஆலோசகர்களை நியமித்துள்ளன. பெரிய அரசியல் கட்சிகள் நிர்வாகிகளை விட, ஆலோசகர்கள் மீது நம்பிக்கை வைப்பது தேவையானதா?

கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து மக்களை சந்திப்பதால் கள நிலவரம் அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுகின்றனர். அவர்களின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் தேர்தல் உத்திகளை உருவாக்குகிறோம். அதேநேரம், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப காலத்தில், சில மாற்றங்களும் செய்ய வேண்டியுள்ளது.

உங்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் புகார்களை அளித்துள்ளதுடன், நேரடி விவாதத்துக்கும் அழைத்துள்ளாரே?

எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் மீதுபொய்யான புகார்களை அளித்துள்ளார். நானும் அவரை விவாதிக்க அழைத்தேன். அவரது புகார்களுக்கு பதில்களை நான் தயாராக வைத்திருக்கும்போது, அவர் விவாதத்தை தவிர்க்க முயற்சிக்கிறார். புகார்களை தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களை குழப்ப அவர் முயற்சிக்கிறார்.

இந்தத் தேர்தலில் கமலுக்கு வாய்ப்பு இருக்குமா அல்லது இரு திராவிட கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டி உள்ளதா?

தமிழகத்தை பொறுத்தவரை, இரு திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் இடையேதான் போட்டி. பொதுமக்கள் மூன்றாவது அணியை ஆதரிக்க மாட்டார்கள். கடந்த 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் தோல்வியே இதற்கு சாட்சி.

முதல்வர் வேட்பாளராக கட்சியினருக்கு தங்களின் அறிவுரை?

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, எப்போதுமே தொண்டர்களின் இயக்கம். எம்ஜிஆருக்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா, தொண்டர்கள் எண்ணிக்கையை கோடிக்கணக்கில உயர்த்தியதுடன், கட்சி மற்றும் அரசை பாதுகாத்தார். அவரது மறைவுக்கு பின் நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதேவழியில் கடுமையாக உழைத்து, தொண்டர்கள் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறேன். அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்கும் வகையில், தொண்டர்கள் விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எனது வேண்டுகோள்.

முதல்வராக தங்களின் மிகப்பெரிய சாதனையாக கருதுவது எதை?

காவிரி பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தியதுடன், காவிரிமேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்கச் செய்தது. விவசாயிகளை பாதுகாக்க, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி லட்சியத்தை நனவாக்க, நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை அளித்தது.

குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு, ஒரு சொட்டு மழைநீர்கூட வீணாகாமல் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,600 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி மையம், 6 புதிய சட்டக் கல்லூரிகள் மற்றும் 2,000 அம்மா மினி கிளினிக் அமைத்

தது போன்ற சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அந்த கமிட்டியின் அறிக்கை அடிப்படையில்தான், பொங்கல் பண்டிகைக்கு வழக்கமான பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து துறைகள்தோறும் அந்த கமிட்டியால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் தாங்கள் எதிர்பார்ப்பது?

கரோனா தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு அரசு ரூ.7,544 கோடியை செலவிட்டுள்ளது. மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடியை கரோனா கட்டுப்பாடு மற்றும் அடுத்தகட்ட பணிகளுக்காக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் எத்தனை புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன?

இந்த 2020-21-ம் ஆண்டில் ஒருலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.61,514 கோடி முதலீட்டிலான 74 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுதவிர, ரூ.5 ஆயிரம் கோடியில் டிஎல்எப் ஐடி பூங்கா, ரூ.1,500 கோடியில் அசெண்டாஸ் ரேடியல் ஐடி பூங்கா, ரூ.250 கோடியில் பட்டாபிராமில் டைடல் பார்க்திட்டம், ரூ.250 கோடியில் ஸ்ரீபெரும்புதூர் ஏரோ ஹப் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழில் : கி.கணேஷ்

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *