Share on Social Media

சண்டிகர்: ‘‘எனது தந்தை மில்கா சிங், சிறந்த நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்தார்,’’ என, ஜீவ் மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் 91. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் சமீபத்தில் காலமானார். இவரது மகன், கோல்ப் வீரர் ஜீவ் மில்கா சிங் 49. தந்தையின் மறைவுக்கு ‘டுவிட்டரில்’ உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

தந்தையர் தினத்தில், எனது தந்தை இல்லாதது சோகமான நாளாக அமைந்தது. அவர், எனக்கு அப்பாவாக இருந்ததைவிட, சிறந்த நண்பராக, வழிகாட்டியாக, நல்ல ஆலோசகராக இருந்தது தான் அதிகம். அவரது இழப்பை சமாளிக்க மனவலிமை தேவைப்படுகிறது. இது, என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

தந்தையின் இறுதி ஊர்வலத்தின் பெரும்பகுதி எனக்கு நினைவில் இல்லை. ஆனால், ராணுவ வீரர்கள், எனது தந்தைக்கு மரியாதை செலுத்தியதை என்றும் மறக்க முடியாது. மில்கா குடும்பத்தினர், எப்போதும் இந்திய ராணுவத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நான், என் அம்மாவையும், அப்பாவையும் இழந்துவிட்டேன். ஆனால் அதைவிட உணர்ச்சிவசப்பட்ட விஷயம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களுக்கு சொந்தமானவரை இழந்துவிட்டது போல இரங்கல் செய்தி அனுப்பினர். இக்கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு ஆதரவு தந்த, அப்பாவின் ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *