Share on Social Media


இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா. முத்தரசன் அறிக்கை: மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கின்றனர் என்பதை, நடிகர் சூர்யா நினைவில் வைத்து, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி, சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும்; அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்.

எந்த விவகாரம் கிடைக்கும், அதை வைத்து குளிர் காயலாம் என காத்திருந்த சில கட்சிகளின் தலைவர்கள், சூர்யா விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தங்கள் இருப்பை காண்பிக்கின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவராகி விடாதீர்கள்!

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழக அரசு, மாணவர்களின் பாதுகாப்பான கல்விக்கும், கற்றலுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். கோவையில் மாணவிக்கு நடந்தது போன்ற கொடுமை, இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வித்துறையின் கறுப்பாடுகளை களையெடுத்து விட்டால், பிரச்னை இருக்காது. அந்த ஆடுகள், பசுந்தோல் போர்த்திய புலி போல அல்லவா இருக்கின்றன…

மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு: கட்சி வேலையை முழுமையாக செய்தால், பதவி தேடி வரும். பா.ஜ.,வில் பதவி என்பது ஒரு பொறுப்பு. எனக்கும் மாநில அளவில், தலைவர் என்ற பெயரில் சேவகன் என்ற பொறுப்பு தான் உள்ளது.

அப்போ நீங்க, தமிழக, பா.ஜ.,வின் தலைமை சேவகனாக இருக்கிறேன் என்கிறீர்கள். பணிவு, பணிவு… அ.தி.மு.க.,விலும் இப்படித் தான் கூறுகின்றனர். இதெல்லாம் வேலை செய்ய வைக்கும் தந்திரமல்லவா!

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி: பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆற்றிய ‘வீடியோ’ உரை, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் தான் கோவில்களில் நடக்கக் கூடாது; கோவில் விழா நடந்ததில் எந்த தவறும் இல்லையே… உ.பி.,யில் உங்கள் கட்சி தனித்து போட்டியிட போகுதாம். போய் பிரியங்காவுக்கு புத்தி சொல்லுங்க!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: மக்கள் பாதிப்படையும் போது நேரில் சென்று உதவ வேண்டும் என, எங்கள் முன்னாள தலைவர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்படி எங்கள் கட்சியினர், தமிழகம் முழுதும் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

மழை நீர் வடிகால்களை அவ்வப்போது துார் வார வேண்டும்; மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆழப்படுத்த வேண்டும் என்றெல்லாம் உங்கள் மறைந்த தலைவி சொல்லித் தரவில்லையா?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *