Share on Social Media


கடலுார் : கொரோனா காலத்தில் கட்டாய வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் எச்சரித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நோய் பரவல் தடுப்பதற்கு ஊரடங்கு முதலான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு பரவலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்கள் பலரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. வருமானம் இல்லாமல் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். இதனால் தொழில் கடன், தொழில் சார்ந்த விவசாய கடன், வியாபார கடன், சுய உதவிக் குழு கடன் முதலான கடன்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை.

கடலுார் மாவட்டத்தில் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் ‘கட்டாய வசூல்” செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு ஒரு தீர்வு காண கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் மாவட்டத்தில் செயல்படும் 25க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.திட்ட இயக்குனர் செந்தில்வடிவு விஜயலட்சுமி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் இளஞ்செல்வி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அகிலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், விஜயன் நிகாஷ், ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், மாவட்டத்தில் அமைப்பு சாரா சிறு முதலீட்டு தொழில் செய்பவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் அதிகளவில் சிறு கடன்களை நுண்நிதி நிறுவனங்களில் பெற்றுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சில வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. கடன் தவணை மாற்றி அமைப்பது, தவணை நீட்டிப்பு, உற்பத்தி பாதித்த பயனாளிகளுக்கு புதிய கூடுதல் நடைமுறை கடன் வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்த கூறியுள்ளது. ஆகவே, கடலுார் மாவட்டத்தில் வங்கிகள் அனைத்தும் இந்த நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.கொரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூல் செய்வதில் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் கடன் தவணை மாற்றி அமைக்க வேண்டும். கட்டாய வசூல் செய்யும் நுண்நிதி நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *