Share on Social Media


விழுப்புரம்: அதிமுக நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் போலீசாரை கடுமையாக தாக்கி பேசினார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சட்டையை கழற்றாமல் விடமாட்டோம் என்று சி.வி.சண்முகமும்,  எங்கள் கட்சிக்காரனை தொட்டால் கையை உடைப்பேன்டா என்று எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அடாவடியாக பேசினர்.  விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் மாரிதாசை கைது செய்யும் காவல்துறை, தமிழக டிஜிபி குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய தைரியம் இருக்கா?. லஞ்ச ஒழிப்பு காவல்துறையை வைத்து அதிமுகவை முடக்க நினைக்கிறார்கள். எங்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணிமீது வழக்கு போட்டிருக்கிறார்கள். முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோ கரன்சி முதலீடு செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி தெரிவித்துள்ளார். நான் கேட்கிறேன், கிரிப்டோ கரன்சிக்கு தமிழகத்தில், இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டிருக்கிறதா? அவரை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். இவர் பணம் வைத்திருந்தை கண்ணால் பார்த்தாரா? என்று கிழி, கிழியென்று கிழித்துவிடுகிறேன். டவுசரை கழட்டிவிடுகிறேன்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் நேர்மையானவர்களா? உத்தமரா? காந்தியின் பக்கத்துவீடா அவர்கள். உயர்அதிகாரிகள் வரை அவர்கள், யாரிடமும் கைநீட்டி காசு வாங்குனது கிடையாதா. எப்படி அவர்கள் வீடுகட்டினார்கள், இதற்கு முன் காவல்நிலையங்களில் வேலை செய்தபோது, திருடர்களை மடக்கி மாமூல் வாங்குனது கிடையாதா?. 2 வீடுகளை கட்டியுள்ளார்கள். அதிமுக ஆட்சிக்கு வரும் போது, அவர்களின் சொத்து என்னவென்று ஆய்வுசெய்வோம். இதே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களின் வீட்டிற்கும் சோதனைக்கு செல்வார்கள். அப்போது அவர்களின் சட்டையை கழட்டாமல் விடமாட்டோம். அப்போது கிரிப்டோ கரன்சி இல்லை, புதுகரன்சியை நாங்கள் ரிப்போர்ட்டாக எழுதுவோம். உங்களை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்றார்.

கரூரில்…: கரூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. நான், சொல்கிறேன், எல்லாத்துக்கும் சேர்த்து அதிகளவு திரும்பவும் மொய் வைப்போம். எங்கள் கட்சிக்காரனை தொட்டால் கையை உடைப்பேன்டா அது உறுதி. ஒரு அடி அடிச்ச, திரும்பவும் அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். போலீசாரை தாக்கி மாஜி அமைச்சர்களின் அடாவடித்தனமாக பேசியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை எதிர்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். வழக்கமாக எதிர்க்கட்சிகள் என்றால், அரசுக்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்கள்.

ஆனால், அதிமுக மாஜி அமைச்சர்கள் போலீசை வசைப்பாடி உள்ளது ஊழல் வழக்குகளை சந்திப்பதில் அவர்கள் அச்சப்படுவதை காட்டுகிறது. போலீசாரை மிரட்டி, வழக்கில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. வாய்மையே வெல்லும் என்றும் போலீசார் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். இதற்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. சட்டரீதியாக சந்தித்து வெல்வோம். முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துகின்றனர். இதனால் நாங்கள் பயந்துவிடுவோம் என நினைக்க வேண்டாம். சாதாரண ஒன்றிய செயலாளர் வீட்டில் கூட ரெய்டு நடத்துகின்றனர். 69 இடம் 70 இடம் என ரெய்டு நடத்துகின்றனர். அந்த இடம் எங்கே இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. ஆட்சி மாறினால் காட்சி மாறும். அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுப்போம். நான் 6 முறை சிறை சென்றுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

திறமை இருக்கிறதோ, இல்லையோ… ஓபிஎஸ், இபிஎஸ்சை ஏற்றுக் கொண்டோம்    : -திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:  அதிமுகவுக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் தலைவர்கள். அவர்களுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் கொண்டு வந்தோம். திறமை இருக்கிறதோ, இல்லையோ அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா அதற்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ்சை ஏற்றுக்கொண்டோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.