Share on Social Media


தமிழில் இன்றைக்கு நேற்றல்ல 60-களில் இருந்தே திரைப்படங்களில் `ஐட்டம் சாங்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு வரும் படங்களில் கவர்ச்சி மிகுந்திருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள். 60-களில் கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே இன்றைக்குத் தெலுங்கு ஐட்டம் சாங்கில் காட்டப்படுவதற்கு இணையான கவர்ச்சியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்பு கதாநாயகிகள் கவர்ச்சி காட்ட மாட்டார்கள். ஐட்டம் சாங்குக்கென்றே தனி நடிகைகள் இருப்பர். இப்போது கதாநாயகிகளே ஐட்டம் சாங்கும் ஆடுகின்றனர் என்பது மட்டும்தான் வேறுபாடு.

வணிக சினிமாவின் ஒரே நோக்கம் படம் பார்க்க வருகிற பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவது. ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப பார்வையாளர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் சினிமாவும் தன்னை தகவமைத்துக்கொள்வது அவசியம். பார்வையாளர்கள் விரும்பாத ஒன்று சினிமாவில் நிலைத்திருக்காது. விலை போகாத சரக்கை யார் விற்பனைக்கு வைப்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தோமென்றால் சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் `ஐட்டம் சாங்’ இருந்து வருகிறது.

இவ்வகைப் பாடல்களைப் பொறுத்தவரை ஆடுகிற நடிகை, இசை மற்றும் பாடல் வரிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு திரைக்கதையில் அப்பாடல் எந்தச் சூழலில் இடம்பெறுகிறது என்பதும் முக்கியம். தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஐட்டம் சாங்குகள் தனித்து துண்டாக இல்லாமல் திரைக்கதை ஓட்டத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கும். நாயகன் அப்பாட்டினூடாக ஏதாவதொன்றைத் துப்பறிவார். `ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ என்கிற பாடலைப் போல நாயகனும் நாயகியுமே கூட மாறுவேடத்தில் ஆடுவார்கள். பில்லா படத்தில் இடம்பெற்றிருக்கும் `நினைத்தாலே இனிக்கும் சுகமே’ பாடலின் முடிவில் அப்பெண் ரஜினியைக் கொல்வதற்காக வந்தவளாக இருப்பாள். அஞ்சாதே படத்தில் இடம்பெற்றுள்ள `கத்தால கண்ணால குத்தாத’ பாடலின் முடிவில் பாண்டியராஜன் கதாபாத்திரம் கொலை செய்யப்படும். இவையெல்லாம் சிறு உதாரணங்கள்தான் நிறைய படங்கள் ஐட்டம் சாங்கை சரியான இடத்தில் பொருத்தியிருக்கும். இது போன்ற பாடல்கள் விறுவிறுப்பான திரைக்கதையில் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்கும் என்கிற பதற்றத்திலேயே வைக்காமல் சற்றே இளைப்பாறுதல் அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வணிக சூத்திரம் என்று சொல்லலாம்.

கவர்ச்சி அல்லாத குத்துப்பாடல்கள்கூட இந்த இளைப்பாறுதலை அளிக்கும். தமிழில் மிகப்பெரும் வெற்றிபெற்ற படமான `கில்லி’ திரைப்படத்தில் வரும் `அப்படிப்போடு’ பாடலை எடுத்துக் கொள்வோம். நாயகனுக்கோ வில்லனிடமிருந்து நாயகியை மீட்டு அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்கிற நோக்கத்துக்காக போலீஸ்கார தந்தையையே பகைத்துக்கொண்டு வந்திருப்பார். நாயகிக்கோ நாயகன் மீது காதல் துளிர்விட்டிருக்கும். க்ளைமாக்ஸை நெருங்கும் இப்படியானதொரு சூழலில் `அப்படிப்போடு’ பாடல் தந்த இளைப்பாறுதல் இருக்கிறதே… அதுதான் பார்வையாளர்களுக்குத் தேவை.

புஷ்பா படத்தின் `ஊ சொல்றியா மாமா’ சர்ச்சை குறித்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்டபோது, “அப்பாடல் வரிகள் உண்மைதானே” என்று கூலாகச் சொன்னார். இங்கே வந்து `ஆம்பள புத்தி’ என்று எப்படிப் பொதுவாகச் சொல்லலாம் என்று கேட்டால் இதே சினிமாவில்தான், `இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ என்றும் சொல்லப்பட்டதை எடுத்து வைப்பார்கள். பாலின மோதலாகவெல்லாம் இதைக் கொண்டு செல்லத் தேவையில்லை. இப்பாடலில் கொதித்தெழவும், கொண்டாடித் தீர்க்கவும் எதுவுமில்லை… இது கமர்ஷியல் இலக்கணங்களோடு எடுக்கப்பட்ட ஒரு கவர்ச்சி பாட்டு; அவ்வளவே!

– ஜிப்ஸிSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.