Share on Social Media


காலநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களின்போதெல்லாம் தவறாமல் விவாதிக்கப்படும் ஒரு சொற்றொடர் “கரிம கால்தடம்” (Carbon Footprint). காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் செயல்பாடுகளில் மிக முக்கியமானது கரிம கால்தடத்தைக் குறைப்பது.

கரிம கால்தடம் என்றால் என்ன? அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?

மிக எளிமையான ஓர் உதாரணமாக நம் தட்டிலிருக்கும் உணவுப் பொருள்களையே எடுத்துக்கொள்வோம். காலை உணவாக இட்லி இருக்கிறது. ஆனால் அது நேரடியாக இட்லியாகவே பயிராவதில்லை.

நெல் விதைக்கப்படுகிறது. அது வளர்வதற்கு எதாவது ஓர் உரம் தேவை. பிறகு அதன் அறுவடையின்போதும் அதை அரிசியாக்கும்போதும் மனித உழைப்பும் இயந்திரங்களின் பங்களிப்பும் உண்டு. நெல்லைக் குற்றி அரிசியாக்குவதற்காக நெல் மூட்டைகள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும். அங்கே இயந்திரங்களின் பயன்பாடு இருக்கும், மின்சாரம் செலவாகும். பிறகு அந்த அரிசி, மொத்த வியாபாரியின் கடைக்குப் பயணிக்கிறது. பிறகு சில்லறைக் கடைகளுக்கு வருகிறது. கடைகளிலிருந்து நாம் வாங்குகிறோம். அதை ஊறவைத்து இட்லிக்காக அரைக்கும்போது கிரைண்டர் இயங்க மின்சாரம் தேவை.

இட்லி

இதேபோல் ஒரு பட்டியல் உளுந்துக்கும் உண்டு. அரிசியும் உளுந்தும் பயிரிடப்படும் நொடி தொடங்கி, நம் தட்டில் இட்லியாகப் பரிமாறப்படும் அந்த தருணம்வரை செலவிடப்படும் ஆற்றல், போக்குவரத்துக்குச் செலவிடப்படும் எரிபொருள், விவசாய இயந்திரங்களின் பயன்பாடு, இயந்திரங்களுக்காக செலவிடப்படும் மின்சாரம், மண்ணிலிருந்து வரும் உமிழ்வுகள், உரங்கள், விவசாயக் கழிவுகளிலிருந்து வரும் உமிழ்வுகள் என்று எல்லாவற்றையும் சேர்த்து கணக்குப் போட்டால், ஒரு இட்லி உருவாக்கப்படும்போது எத்தனை கரிமம் (கார்பன்) உமிழப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

சராசரியாக ஒரு கிலோ இட்லிக்கு 682 கிராம் கார்பன் உமிழப்படுகிறது. ஒரு கிலோ தோசையை உருவாக்கும்போது உமிழப்படும் கரிமத்தின் அளவு 729 கிராம்! கிட்டத்தட்ட 40 கிராம் கூடுதல் கரிமம் தோசையால் உமிழப்படுகிறது. இந்தக் கூடுதல் கரிமம், தோசை தயாரிக்கும்போது சேர்க்கப்படும் எண்ணெயாலும் எரிபொருள் செலவாலும் வருகிறது. அதே தோசையை மசால் தோசையாக மாற்றினால் கரிம அளவு இன்னும் கூடுதல். ஏனென்றால் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு உமிழப்படும் கரிமத்தின் அளவு 787 கிராம். இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. சாதாரண அரிசியை விட பாஸ்மதி அரிசிக்குக் கூடுதல் கரிமம், ஆப்பிளை விட வாழைப்பழத்தால் உமிழப்படும் கரிமம் குறைவுதான்… என்று இது நீண்டுகொண்டே போகிறது.

சரி… இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து சாப்பிட முடியுமா?!

ஒரு சிலர், “குறைவான கரிம கால்தடத்தைக் கொண்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இப்படித்தான் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் கவனத்துடன் செய்யவேண்டும்” என்கிறார்கள். கூடியவரையில் விமானப் பயணத்தைத் தவிர்ப்பது, கார் பயணங்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து செல்வது, தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, மின்சார சேமிப்பு, குறைவான இறைச்சிகள் உள்ள உணவுமுறை, பால்பொருட்களைக் குறைத்துக்கொள்வது, அடிக்கடி புதுத்துணிகள் வாங்காமல் இருப்பது என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.

பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு என்ற அம்சத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஒரு கிலோ பருத்தித் துணிக்கான உமிழ்வுகளின் அளவு, நைலான் மற்றும் கம்பளித்துணியை விட அதிகம். ஆகவே, காலநிலை மாற்றத்தைத் தடுக்க, பருத்தியை விட நைலான் துணிகளே ஏற்றவை.

Untitled design 31 1 Tamil News Spot
ஓடிடி தளங்கள் | OTT

இவ்வளவு ஏன், தொடர்ந்து அதிவேகத்தில், இணையத்தில் வெப்சீரிஸ்களை இலக்கில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த Streaming செயல்பாடுகளின்மூலம்கூட கரிம உமிழ்வுகள் ஏற்படும்! அரைமணிநேரம் இணையத்தில் வீடியோக்கள் பார்த்தால் 1.6 கிலோ கார்பன் உமிழப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லபோனால், சூழலியல் ஒப்பீட்டின்படி, அரைமணிநேரம் வீடியோ பார்ப்பதும், பெட்ரோல் வண்டியில் ஆறு கிலோ மீட்டர் பயணிப்பதும் ஒன்று!

Grand Theft Auto, Assassins Creed போன்ற வீடியோகேம்களிலும் அதிக அளவில் கரிம உமிழ்வுகள் வெளியாகின்றன. குறைவான கரிம கால்தடம் வேண்டுமானால், நாம் இணையத்தில் அதிவேகத் தளங்களில் வீடியோக்கள் பார்ப்பதையும் வீடியோகேம் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.

மின்சார சேமிப்பு, ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது, கூடியவரையில் உள்ளூரில் விளையும் காய்கனிகளையே உண்பது போன்ற சில வழிமுறைகளை நாம் அனைவரும் பின்பற்ற முடியும்.

இவை தவிர, கரிம கால்தடத்தைக் குறைப்பதற்கான பல வழிமுறைகள் மேலை நாடுகளுக்கு மட்டுமே பொருந்துபவை. “ஒரு தடவையாச்சும் அப்பா அம்மாவை ஃப்ளைட்ல கூட்டிட்டுப் போகணும்” என்பதைக் கனவாக வைத்திருக்கும் பலர் இங்கே உண்டு. இதில் விமானப் பயணத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற வழிமுறையை எப்படிப் புரிந்துகொள்வது?! கார் வாங்குவது இங்கு பலருக்கு வாழ்நாள் கனவு. சரியாக சொல்லபோனால் இன்னமும் பொதுப்போக்குவரத்தை நம்பியிருப்பவர்களே பெரும்பான்மை என்ற நிலையில், போக்குவரத்து சார்ந்த இந்த வழிமுறைகள் நமக்கு சரிவராது.

கரிம கால்தட விவாதங்களில் உணவைப் பற்றிப் பேசுவது சிக்கலானது. கரிம கால்தடம் என்ற ஒரே அம்சத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் இறைச்சி உணவை விட மரக்கறி உணவில் குறைந்த உமிழ்வுகளே வெளியிடப்படுகின்றன. அதற்காக அனைவரும் இறைச்சியை நிறுத்திவிடுங்கள் என்று ஒரேயடியாக பிரசாரத்தைத் தொடங்கிவிட முடியாது. பல விளிம்புநிலை மக்களுக்கு இறைச்சி ஒரு முக்கியமான புரதப்பொருள் (Protein Source). தவிர, உணவு என்பது வெறும் கரிம கால்தடக் கணக்கு அல்ல. அது அடையாளத்துடனும் மரபுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது.

Carbon footprint Tamil News Spot
கரிம கால்தடம் | Carbon Footprint

ஒருவர் தட்டிலிருக்கும் உணவை விமர்சிக்கவோ அவர் உண்பதைத் தடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. ஏற்கெனவே உணவு அரசியல் தன் கோரப்பற்களை நீட்டியபடி வலம் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவுசார் உரிமைகளைக் கண்டுகொள்ளாமல் சுற்றுச்சூழலை மட்டும் முன்வைத்து இறைச்சி வேண்டாம் என்று சொல்வது சூழல்சார் ஃபாசிஸமாகிவிடும்.

இதே பட்டியலில் பால் பொருள்களும் இடம்பெறுகின்றன. ஆகவே, சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ் எல்லாவற்றையுமே தவிர்க்கவேண்டும். இது சாத்தியப்படுமா?

பருத்தித் துணியால் உமிழ்வுகள் அதிகம் என்பதை இந்தியாவின் வெப்பநிலையோடு பொருத்திப் பார்க்கலாம். மரபுசார்ந்து மட்டுமல்ல, சௌகரியத்துக்காகவும் பருத்தியாலான தளர்வான ஆடைகளே நம் விருப்பத் தேர்வுகளாக இருக்கின்றன. அக்னி நட்சத்திர வெயிலில் கம்பளி ஆடைகளை உடுத்திக்கொள்ள முடியுமா?

ஒருவேளை இந்த எல்லா வழிமுறைகளையும் உலகத்திலுள்ள எல்லாரும் பின்பற்றினாலும்கூட, பசுங்குடில் வாயுக்கள் 36.8% மட்டுமே குறையும் என்கிறது 2018 வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை!

வெறும் 36 தானா என்று அலுப்பாக இருக்கிறதா? இன்னும் சில கணக்குகளையும் கேட்டுவிடுங்கள்.

1988 முதல் இப்போது வரை வெளியிடப்பட்ட மொத்த கரிம உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 71% உமிழ்வுகளுக்கு வெறும் 100 பெருநிறுவனங்களே காரணம் என்கிறது ஒரு தரவு. உலகத்தை வர்க்க ரீதியாக அடுக்கினால், அதில் உச்சத்தில், அதீத பணக்காரர்களாக இருக்கிற 10% மனிதர்கள், பசுங்குடில் வாயுக்களில் பாதியை வெளியிடுகிறார்கள் என்கிறது 2015ல் வந்த ஆக்ஸ்ஃபேம் அறிக்கை. அதாவது, 10% பேரால் பாதி பசுங்குடில் வாயுக்கள், மிச்சமிருக்கிற 90% பேரும் சேர்ந்து வெளியிடும் வாயுக்கள் மீதி 50%!

Activities3 Tamil News Spot
கரிம உமிழ்வும் அதைக் குறைக்க வழியும்…

ஒரு ஆண்டுக்கு உலகில் ஒவ்வொருவராலும் வெளியிடப்படும் சராசரி கரிம அளவு 4 டன். ஒரு சராசரி அமெரிக்கரின் கரிம உமிழ்வு வருடத்திற்கு 16 டன் வெளியாகிறது! அதாவது உலகத்தின் சராசரி அளவை விட நான்கு மடங்கு கூடுதல். கரிம உமிழ்வில் உலகிலேயே அமெரிக்காவுக்குத்தான் முதலிடம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அமெரிக்கர்களைப் போல வாழ நினைத்தால், அதற்கு 7 பூமிகளின் வளங்கள் தேவைப்படும் என்று ஒரு கணிப்பு உண்டு!

சராசரி இந்தியரால் வருடத்துக்கு உமிழப்படும் கரிம அளவு 1.7 டன் மட்டுமே. இது உலக சராசரியை விடக் குறைவு. அது மட்டுமல்ல, 2050ல் உலக சராசரி 2 டன்னாக இருந்தால் மட்டுமே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு இலக்கு இருக்கிறது. அதனோடு ஒப்பிட்டாலும் நம் சராசரி அளவு குறைவுதான்.

படிக்கப் படிக்க நாம் எதையும் செய்யவேண்டாம் என்று தோன்றுகிறதா? அப்படி எதுவுமே செய்யாமல் விட்டுவிடவும் முடியாது. தனிநபர் செயல்பாடுகளே சமூக மாற்றங்களுக்கு உந்துதலாக இருக்கின்றன.

Also Read: ஊழிக்காலம் – 18 | மரங்களை நடுவதால் மட்டுமே காலநிலைப் பேரிடர்களைத் தடுக்க முடியுமா?

அரசுகளை நோக்கிய கேள்விகளை நாம் எடுத்துச் செல்வதற்கு முன்னால், நம்மால் முடிந்த சிறு முயற்சிகளை நம் வாழ்க்கை முறைக்குள் முன்னெடுக்கலாம். காலநிலை மாற்றம் என்ற பிரச்னையைத் தாண்டி, உணவு வீணாவதைக் குறைப்பது, குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்வது, ப்ளாஸ்டிக்கைக் குறைத்துக்கொள்வது உள்ளிட்ட பல வழிமுறைகள் பொதுவான சூழல் பாதுகாப்புக்கும் தேவைதானே! முடிந்தவர்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். அவரவர் சமூக, பொருளாதார சூழலுக்கு ஏற்ற சிறு வாழ்வியல் மாற்றங்களை செயல்படுத்துவது ஒரு முதல் படி என்று தோன்றுகிறது.

climate 4342959 1280 Tamil News Spot
காலநிலை மாற்றம்

சுற்றுச்சூழலுக்காக சிறு வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ளாதவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிக் கேள்வி கேட்காமலும், இந்த மாற்றத்தோடு செயல்பாடு முடிந்துவிட்டது என்று சுருங்கிவிடாமல் இருப்பதும் முக்கியமானது. இந்த மாற்றம் செயல்பாட்டின் ஓர் அங்கம் மட்டுமே. முக்கியமான செயல்பாடாக, காலநிலை மாற்றத்துக்கான தீர்வை ஒரு அடிப்படை உரிமையாகக் கோருகிற நம் குரல் உரத்து ஒலிக்கவேண்டும். கரிம உமிழ்வுகளை, புதைபடிவ எரிபொருள்களைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சியை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

கரிம உமிழ்வுகளை, புதைபடிவ எரிபொருள் பயன்பாடுகளை எப்படிக் குறைப்பது? இதிலிருக்கும் சர்வதேச லாபி எப்படிப்பட்டது?

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

– Warming Up…Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *