Share on Social Media


புதுடில்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அங்கு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப்போவதாகவும், பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்.,சும், இன்னாள் எம்.எல்.சி.,யுமான ஏ.கே.சர்மாவுக்கு பெரிய பதவி தர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்திற்கு 2022 தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது. கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது.

பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி!

இந்நிலையில் இவ்வாரம் பா.ஜ.,வின் தேசிய நிர்வாகிகள் உ.பி.,க்கு வந்து கட்சியின் செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். முதல்வர், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை அறிந்து அதனை டில்லி தலைமைக்கு கொண்டு சென்றனர். மேலும், ஆய்வு கூட்டத்தில் சமீபத்திய பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.,வின் கோட்டை என கருதப்படும் இடங்களில் கூட படுதோல்வி அடைந்ததன் காரணம் குறித்து அலசியுள்ளனர்.

அவர் தலைமையில் தான் தேர்தல்!

இந்த கூட்டத்தை தொடர்ந்து அடுத்த முறையும் யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்குமா பா.ஜ., என்ற கேள்வி எழுந்தது. “அதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமே இல்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநிலத் தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் தலைமையில் தான் எதிர்வரும் தேர்தலை சந்திப்போம்” என அம்மாநில பா.ஜ.,வினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

அதே சமயம் இந்த மாதத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்கின்றனர். குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மற்றும் பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் தந்து புதிய அமைச்சர்களின் தேர்வு இருக்கும் என மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர். அதில் ஏ.கே.சர்மாவுக்கு பெரிய பொறுப்பு தர உள்ளதாக டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

நண்பருக்கு பதவி!

குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஏ.கே.சர்மா மோடி முதல்வராக இருந்த காலம்தொட்டு அவருடன் பயணிப்பவர். அவர் தற்போது பா.ஜ.,வில் இணைந்து எம்.எல்.சி.,யாக உள்ளார். பிரதமரின் வாரணாசி தொகுதியில் தொற்றை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மோடியின் நம்பிக்கைக்குரியவரான அவர் விரைவில் உ.பி., அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார் என்கிறார்கள்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *