Share on Social Media

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை வித்தியாசமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடை. உளுந்து மட்டும் விற்பனை செய்வதற்காக மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்றைக்கு மிகப் பெரிய பல சரக்கு மளிகையாக வளர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் இந்தக் கடைக்கு நாம் விசிட் அடித்தோம்.

முத்துக்கிருஷ்ணன்

கும்பகோணம் முக்கண்ணன் தெருவில் இருக்கிறது கே.டி.எம் என சுருக்கமாக அழைக்கப்படும் கஸ்தூரி டால் மில் என்னும் மளிகைக் கடை. இந்த மளிகைக் கடையில் உள்ளே நுழைந்தவுடன் முன்பகுதியிலேயே வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்கிற மாதிரி கடையில் உள்ள அனைத்துப் பொருள்களையும் தனித்தனியாக சிறிய கவரில் அடைத்து சாம்பிளுக்காகக் காட்சிப்படுத்தியிருப்பதுடன், அதில் பொருள்களின் விலையையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் உள்ளே வந்ததும் சாம்பிள் பொருள்களைப் பார்த்து, அதை வாங்கலாமா, வேண்டாமா என்கிற முடிவை உடனே எடுக்கத்தான் இந்த ஏற்பாடாம்.

அது முடிந்தவுடன் அனைத்துப் பொருள்களின் விவரங்கள் அச்சடிக்கப்பட்ட பேப்பரையும், என்னென்ன பொருள்கள் தேவை என்பதைக் குறிக்க ஒரு பேனாவையும் தருகிறார்கள். இந்த பேப்பரை கவுன்டர்களில் தந்தால் (ஐந்து கவுன்டர்கள் இருந்தாலும் க்யூ இருந்துகொண்டே இருக்கிறது) கட்ட வேண்டிய பணம் எவ்வளவு என்று சொல்லிவிடுகிறார்கள்.

பணத்தை கவுன்டரில் செலுத்திய பிறகு வசதியாக உட்கார சேர்கள் இருக்கின்றன. கவுன்டரில் பணம் செலுத்தும்போதே பில்லில் டோக்கன் நம்பரைக் குறித்துத் தந்துவிடுகிறார்கள். ஆர்டர் தந்த பொருள்கள் எல்லாம் கட்டி முடித்தபின், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய டிஜிட்டல் போர்டில் டோக்கன் நம்பர் ஒலிக்கிறது. உடனே கஸ்டமர்கள் பொருள்களைப் பெற்றுச் செல்கின்றனர். இப்படி இந்தக் கடையில் மளிகைப் பொருள்களை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர். கும்பகோணம் மகாஜனங்கள் மட்டுமல்ல, பக்கத்தில் இருக்கும் நகரங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.

kumb Tamil News Spot
கும்பகோணம்

சாதாரண மளிகைக்கடையை ஹைடெக்காக நடத்தும் ஐடியா எப்படி வந்தது என்பதை இந்தக் கடையின் உரிமையாளரான முத்துக்கிருஷ்ணன் நம்மிடம் சொன்னார்.

“என்னோட அப்பா கலியமூர்த்தி 1967-ல் இந்த இடத்துல உளுந்து, பாசிப் பருப்பு உடைச்சு விற்பனை செய்யும் கடையை சின்னதா நடத்திவந்தார். கிராமத்துக்குச் சென்று நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதில் கிடக்கும் கல், தூசி உள்ளிட்டவற்றை நீக்கி எடுத்து சுத்தமான முறையில் உடைச்சு குறைந்த விலையில் கொடுத்ததால குறுகிய காலத்துலேயே கஸ்டமர்கள் மனசுல இடம்பிடிச்சிருச்சாரு எங்க அப்பா.

அதன் பிறகு, எங்க பிசினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோக கஸ்டமர்களே ஐடியா கொடுத்தாங்க. எங்க கடைக்கு ரெகுலரா வந்த கஸ்டமர்கள் மளிகைப் பொருள்களையும் கேக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் அதையும் விக்க ஆரம்பிச்சோம். விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியா பருப்பு வாங்கி, எங்க சொந்த மில்லுல உடைச்சு விற்பனை செஞ்சதால, தரத்திலயும் உறுதியா இருக்க முடிஞ்சது. விலையும் குறைவா தர முடிஞ்சது. அத்தோட, எண்ணெய் மில் வச்சு, எண்ணெய் ஆட்டியும் கொடுத்தோம்.

இப்படி சிற்சில பொருள்களை மட்டுமே வித்து வந்த நாங்க, 2008-லதான் முழுமையான ஒரு மளிகைக் கடையைத் தொடங்கினோம். அப்பாவுடன் நானும் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பிச்சேன். பல சரக்கு மொத்த விற்பனை செய்ய ஆரம்பிச்சதால, ஜனங்களுக்கு பணம் மிச்சமாச்சு. அதனால அடுத்தடுத்து வர ஆரம்பிச்சதோட, புது கஸ்டமர்களும் வந்தாங்க. கஸ்டமர்கள் கூட்டம் அதிகமானதால, பழைய கட்டடத்துல செளகரியமா பிசினஸ் பண்ண முடியலை. புதுசா கட்டடத்தைக் கட்றப்ப, ஹைடெக் டெக்னாலஜியையும் இந்தக் கடையில நாங்க கொண்டுவந்துட்டோம்.

பொதுவா, இட நெருக்கடிங்கிறது ஒவ்வொரு மளிகைக் கடையின் எழுதப்படாத விதியா இருக்கும். ஆனா, பேங்குக்குப் போனா, அங்க ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரு வித அமைதி இருக்கும். அது மாதிரியான ஒரு சூழ்நிலையை எங்க கடையில கொண்டு வர நெனைச்சேன். குறிப்பா, அனைத்துப் பொருள்களையும் கஸ்டமர்கள் உள்ளே வந்தவுடனே பார்க்கிற மாதிரி வச்சு ஷோகேஸ் பண்ணது கஸ்டமர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போயிடுச்சு.

Kum 3 Tamil News Spot
கும்பகோணம் மளிகைக்கடை

Also Read: `ஒருநாள் என் பெயரை எல்லோரும் உச்சரிப்பாங்க!’ – கூலி வேலை டு செல்போன் ஷோரூம்; சாதித்த தொழிலதிபர்

ஒரு பக்கம் இப்படி மார்க்கெட்டிங் டெக்னிக், இன்னொரு பக்கம் அப்பளம், சாம்பார் பொடி, மசாலா பொருள்கள், பல வகையான எண்ணெய் எனப் பல பொருள்களை எங்க சொந்தத் தயாரிப்பிலேயே செஞ்சு தர்றதால, தரத்துல நோ காம்பரமைஸ்’’ என்று பெருமையுடன் பேசி முடிக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.

சாதாரண மளிகைக்கடையை ஹைடெக்காக மாற்றி நடத்திவரும் முத்துக்கிருஷ்ணன் எம்.பி.ஏ படிக்கவில்லை. ஆனால், அவர் பின்பற்றும் டெக்னிக்குகள் எம்.பி.ஏ பாடங்களாக உள்ளன. மளிகைக் கடைகளை மரபு ரீதியாக நடத்தாமல், இப்படி லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் நடத்தினால் வெற்றி நிச்சயம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *