Share on Social Media


திருப்போரூர்: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் போட்டியிட விரும்பும் திமுகவினர் அந்தந்த உள்ளாட்சி திமுக அலுவலகங்களில் விருப்ப மனு வழங்கலாம் என திமுக தலைைமை அறிவித்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி திருப்போரூர் நகர திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நகர திமுக செயலாளர் தேவராஜ் வரவேற்றார். தலைமை கழக பார்வையாளர் எம்.கே.டி.கார்த்திக், திமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார். திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஏராளமான திமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு தாக்கல் செய்தனர். மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி மாங்காடு பேரூர் செயலாளர் பட்டூர் எஸ்.ஜபருல்லா தலைமையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், திமுகவினரிடம் இருந்து  விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு திமுக சார்பில் போட்டியிட ஆண், பெண்கள் என மொத்தம் 26 பேர் ஆர்வமுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
மாவட்ட துணை செயலாளர் வெ.விஸ்வநாதன், மல்லை நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார், நிர்வாகி சண்முகானந்தம் உள்பட பலர் இருந்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்  பவளவிழா மாளிகையில் மாவட்ட  செயலாளர், க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், திமுகவினர் ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க வந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிட மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன் உள்பட 121 பேர் விருப்ப மனு பெற்று ₹10 ஆயிரம் கட்டணத்துடன் விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து பொறுப்பாளர்களிடம் அளித்தனர். இதேபோன்று, மதுராந்தகம் நகராட்சிக்கு 54, வாலாஜாபாத்தில் 25, உத்திரமேரூரில் 37, கருங்குழியில் 25, அச்சிறுப்பாக்கத்தில் 24, இடைக்கழிநாட்டில் 49 என மொத்தம் 214 பேர் விருப்ப மனு அளித்தனர்.

இதில் எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், பி.சேகர், ஞானசேகரன், பூபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 37 பேர், தேர்தல் பொறுப்பாளரும், அனகாபுத்தூர் நகர செயலாளருமான நரேஷ்கண்ணாவிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள் செல்வக்குமார், கோபால், விஜயன், செங்குட்டுவன், சரவணன் உள்பட பலர் இருந்தனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *