Share on Social Media


நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் பணியில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில், தனக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்களின் பாதங்களில் பூக்களைத் தூவி நன்றி தெரிவித்து அவர்களை நெகிழ வைத்துச் சென்றிருக்கிறார்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனை

அறந்தாங்கி அரசு மருத்துவமனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் மணிமாறன், இருமல், மூச்சுத்திணறலுடன் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் தேவையான நேரத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுத்து மிகுந்த அக்கறையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பலனாக 5 நாள்களில் குணமாகியிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லத் தயாரான மணிமாறன், அருகிலேயே இருந்த பூக்கடையில் பூக்களை வாங்கி, தனக்குச் சிகிச்சை அளித்த இரண்டு செவிலியர்களையும் வரவழைத்து, அவர்களின் கால்களில் பூக்களைத் தூவி வணங்கி தனது நன்றியைத் தெரிவித்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத செவிலியர்கள் நெகிழ்ந்துபோயினர். தொடர்ந்து, அவருக்குச் செவிலியர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *