Share on Social Media


`உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சிதான், நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தம்’ என்பது தேசியக் கட்சிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வரலாறும் அதைத்தான் நமக்குச் சொல்கிறது. எனவே, உ.பி-யில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமெனக் காங்கிரஸும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி-யில் மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தில், தற்போது அந்தக் கட்சிக்கு வெறும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் வேலை செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரியங்கா காந்தியை உ.பி மாநில பொறுப்பாளராக நியமித்தது கட்சி மேலிடம். கடந்த சில மாதங்களாக உ.பி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நல்லுறவை வலுப்படுத்தும் வேலைகளைப் பிரியங்கா செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

பிரியங்கா காந்தி

Also Read: `உ.பி என்றால் மட்டும் ஓடிவந்து அரசியல் செய்கிறார் பிரியங்கா காந்தி’ – கொதிக்கும் வானதி சீனிவாசன்!

இந்த நிலையில், நேற்று (18.7.2021) உ.பி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை லக்னோவில் சந்தித்துப் பேசினார் பிரியங்கா காந்தி. அப்போது பேசிய அவர், “வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நான் உ.பி-யில்தான் இருப்பேன். காங்கிரஸ் கட்சி இதற்கு முன் மாநிலத்தில் சற்று தொய்வாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தற்போது விழித்துக் கொண்டது. அதுவும் கடந்த 18 மாதங்களாக உ.பி-யில் காங்கிரஸின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. பல்வேறு மக்கள் பிரச்னைக்காகக் குரல் கொடுத்திருக்கிறோம். கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்தியிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் 5,6 பேர் காங்கிரஸுக்காக அர்ப்பணிப்போடு வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

மேலும், “பல்வேறு காரணங்களுக்காகக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சி செய்து வருகிறோம். முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினால், அது குறித்து பரிசீலனை செய்யக் கட்சி மேலிடம் தயாராக இருக்கிறது” என்றும் கூறினார் பிரியங்கா.

பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகிகளிடம் பேசிச் சென்றதை அடுத்து உற்சாகத்தில் இருக்கின்றனர் உ.பி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள். இது குறித்துப் பேசும் நிர்வாகிகள், “உ.பி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பிரியங்கா. தற்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடத் தயார் என்று அறிவித்திருப்பது, மாநிலத்தில் கட்சியை வலுப்பெறச் செய்யும். மேலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. கூட்டணிக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறார் பிரியங்கா. உ.பி மாநில காங்கிரஸில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

EwSiiyXVIAI78ea Tamil News Spot
சித்தார்த் நாத் சிங்

பிரியங்கா காந்தியின் உ.பி விசிட் குறித்து விமர்சித்துப் பேசிய பா.ஜ.க அமைச்சர் சித்தார்த் நாத் சிங், “பிரியங்கா காந்தி உ.பி-க்கு சுற்றுலாப் பயணியாகத்தான் வந்திருக்கிறார். உ.பி மக்களின் பிரச்னை குறித்து எந்தவித அக்கறையும் அவருக்கு இல்லை. உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லவிருப்பதாகச் செய்தியாளர் சந்திப்பில் பிரியங்காவே சொல்லியிருக்கிறார். இதன்மூலம் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வதைப் போலவே உ.பி-க்கும் வந்து சென்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ராகுல், பிரியங்கா இருவருக்குமே உ.பி ஒரு சுற்றுலாத் தலம்தான். அதனால்தான் உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸ்மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “நான் ஒன்றும் சுற்றுலாப் பயணி அல்ல. அடிக்கடி இங்கு வந்து செல்கிறேன். கிஷான் பஞ்சாயத் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். தீவிரமற்ற அரசியல்வாதிகளைப் போல என்னையும், ராகுலையும் சித்தரிப்பதே பா.ஜ.க-வினருக்கு வேலையாக இருக்கிறது” என்றிருக்கிறார் பிரியங்கா.

பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச காங்கிரஸில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து சில கருத்துகளை அடுக்குகிறார் அரசியல் நோக்கர்கள். “தற்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். நாட்டிலேயே அதிக அளவு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கட்சி பலவீனமாக இருப்பதைக் கட்சி மேலிடம் விரும்பவில்லை. எனவேதான் பிரியங்காவைப் பொறுப்பாளராக நியமித்து உ.பி-யில் கட்சியை வலுப்படுத்தும் வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் பா.ஜ.க மேலிடத்துக்கும் உள்ள உரசல், யோகி ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி உள்ளிட்டவற்றைச் சாதகமாக்கி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், வலுவான எதிர்க்கட்சியாக ஆவது இருக்க வேண்டும் எனக் கட்சி மேலிடம் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் `எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயார்’ என்ற தொனியில் பிரியங்கா பேசியிருப்பதன் மூலம், உ.பி-யில் பா.ஜ.க-வை வலுவிழக்கச் செய்வதுதான் பிரியங்காவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைமெண்ட் எனத் தெரிகிறது.

priynak gandhi Tamil News Spot
பிரியங்கா காந்தி

Also Read: பஞ்சாப்: சிக்கலில் பாஜக; விரிசலில் காங்கிரஸ்; முந்தும் ஆம் ஆத்மி! – 2022 தேர்தல் யாருக்குச் சாதகம்?

2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டுதான் இந்தப் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை பிரியங்கா உ.பி-யில் காங்கிரஸை வலுப்பெறச் செய்துவிட்டால், 2024 தேர்தலில் ராகுலுக்குப் பதிலாக பிரியங்காவை முன்னிறுத்தக்கூட வாய்ப்பிருக்கிறது. பிரியங்கா, `கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து பரீசிலிப்போம்’ என்று சொல்லியிருப்பதும், `கூட்டணியில் பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவோம்’ என்று சொல்லியிருப்பதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி-யில் காங்கிரஸைவிட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி பலமாக இருக்கிறது. அவருடன் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராக இருப்பது போலவே தெரிகிறது. இந்தக் கூட்டணி அமைந்தால் உ.பி-யில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்று உ.பி-யில் கட்சியை வலுப்படுத்தப் பல திட்டங்களைப் பிரியங்கா வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி அந்தத் திட்டங்கள் அனைத்தும் பலித்தது என்றால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் கை ஓங்கும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *