Share on Social Media

ஜுன் 21… கிரிக்கெட் வரலாற்றில் இந்த நாளை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் அணி வெற்றி பெற்று சாதனை படைத்த நாள். வெறுமென வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையை வென்றுவிட்டார்கள் என்பதற்காக மட்டும் இந்த நாள் வரலாற்றில் இடம்பிடித்துவிடவில்லை. இது ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டெழுந்து திருப்பியடித்த நாள். ‘’நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் இணையானவர்கள் என்று நம்பினோம். அதை இந்த உலகுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாக கிரிக்கெட்டைப் பார்த்தோம்’ என விவியன் ரிச்சர்ட்ஸ் இந்த உலகக்கோப்பை குறித்து பேசியிருப்பார். விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமில்லை க்ளைவ் லாயிட் தலைமையில் சென்ற மொத்த கரீபிய வீரர்களின் எண்ணமும் இதுதான். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திமிறி எழ கிரிக்கெட்டை ஒரு கருவியாக பயன்படுத்தினர்.

கிரிக்கெட்டின் ஒரு உச்சபட்ச கோப்பையை வெல்வதன் மூலம் தங்களின் ‘உரிமைக்குரலை’ உலக அரங்கில் ஒலிக்கச் செய்யமுடியும் என நம்பினர். நம்பிக்கையின்படியே, லார்ட்ஸ் மைதானத்தின் கேலரியில் உலகக்கோப்பையோடு கரீபிய வீரர்கள் போஸ் கொடுத்தனர். அவர்களை பொறுத்தவரைக்கும் அது வெறும் கோப்பையல்ல, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்ட நபர்கள் கொடுத்த பதிலடிக்கான குறியீடு. ஆம், கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு கோப்பையும் சாதாரணமானவை கிடையாது. அவை ஏற்படுத்தும் தாக்கமும், சொல்லும் செய்தியும் மிகப்பெரியது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மேட்டுக்குடியினருக்கான விளையாட்டாகவும் சமூகத்தின் உயர்மட்டங்களில் இருப்பவர்களின் விளையாட்டாகவும் மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை உடைத்தது இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றி. கபில்தேவின் படை நிகழ்த்தி காட்டிய அந்த சாதனை இந்தியாவின் இண்டு இடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. பணக்காரர்களுக்கு ஏதுவான விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை தென்னை மட்டையுடன் சைக்கிள் ட்யூப்பையும் வைத்தே ஆட வைத்து ஜனநாயகப்படுத்தியது அந்த 1983 உலகக்கோப்பை வெற்றிதான். இன்றைக்கு சேலத்தில் ஒரு மூலையில் இருக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்திலிருந்து நடராஜன் இந்திய அணிக்கு புறப்பட்டு வருகிறார் என்றால் அதற்கு விதையாக இருந்தது இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிதான்.

ஆப்கானிஸ்தான் எப்படி உலகக்கோப்பையை வெல்லும்? அப்படியே வென்றாலும் இந்தியாவுக்கும் தோனிக்கும் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?

ஆப்கானிஸ்தான் டி20 உலகக்கோப்பையை ஏன் வெல்ல முடியாது? இன்று உலகம் முழுவதும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடக்கிறது. அங்கேயெல்லாம் ஸ்டார் பெர்ஃபார்மர்களாக ஆப்கானிஸ்தான் வீரர்களே இருக்கிறார்கள். ரஷீத்கான் இல்லாத ஒரு லீடிங் விக்கெட் டேக்கர் பட்டியல் எந்த பிரீமியர் லீகிலும் இருக்காது. முகமது நபி பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மிரட்டுகிறார். முஜிபுர் ரஹ்மான் கலக்குகிறார். இன்னும் எத்தனையோ ஆப்கன் வீரர்கள் கரீபியன் ப்ரீமியர் லீகிலும், பாகிஸ்தான் சூப்பர் லீகிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *