Share on Social Media


சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி கலவரத்தில் முடிந்தது. இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டு  ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எந்த ஆலோசனை கூட்டம்  என்றாலும் அடிதடி சர்ச்சைகள் நிறைந்ததாகவே மாறிவிட்டது. அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதிலும் அடிதடி சம்பவங்கள் அரங்கேறின .தற்போது உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்காக ஆங்காங்கே அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் இரு அணிகளாகவும்  மூன்று அணிகளாகவும் பிரிந்து கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன வடசென்னை, வடக்கு மேற்கு மாவட்டம் பகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் வில்லிவாக்கம் தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம்  நேற்று மதியம் திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், அப்துல் ரஹீம், அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மேடைக்கு அருகே கொளத்தூர் மேற்குப் பகுதி செயலாளர் கொளத்தூர் கணேசன் மேடையில் ஏற முற்பட்டபோது, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபுவின் ஆதரவாளர்கள் அவரை மேடையில் ஏறக்கூடாது என கூறி கூச்சலிட்டனர். அதற்கு பகுதி செயலாளர்  கொளத்தூர் கணேசனின் ஆதரவாளர்கள், ‘ஒரு பகுதி செயலாளரை மேடையில் ஏன் ஏறக்கூடாது’ என்று கூறுகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் பலமாக மோதிக் கொண்டனர். இதில் மேடையில் இருந்த சிலர் தவறிக் கீழே விழுந்தனர் .

இது தொடர்பாக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபுவிடம் அதிமுக நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம்  அந்த இடமே போர்க்களமாக மாறியது. அப்போது நடைபெற்ற கைகலப்பில் கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் சந்திரசேகர் மற்றும் 68 வது வட்ட செயலாளர் இரா.டில்லி மற்றும் வட்ட செயலாளர்கள் சந்துரு, அர்னால்டு ஆகிய 4 பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 சண்டை நடந்து கொண்டிருக்கும் போது மண்டபத்திற்குள் வந்த முன்னாள் அமைச்சர்கள்  மாபா பாண்டியராஜன், அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு இருந்த வெங்கடேஷ் பாபு கொளத்தூர் கணேசன்,கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறினார். இதனையடுத்து அங்கு நிலைமை ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டது. அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் மேடைக்கு வரவழைத்து அமரவைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபுவுக்கும் பகுதி செயலாளர் கொளத்தூர் கணேசனுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும் இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்பதை மாவட்ட செயலாளர் விரும்பாத காரணத்தினால் அவரின் ஆதரவாளர்கள் கொளத்தூர் கணேசனை தாக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அது கலவரத்தில் முடிந்தது.

தற்போது மாவட்ட செயலாளருக்கும் மற்றும் ஒரு பகுதி செயலாளருக்கும்  இடையே பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ள சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் சார்பிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து திருவிக நகர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும்  தெரிவித்தனர். மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் கொளத்தூர் கணேசனை தாக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.