விகடனின் ‘Doubt of Common Man’ பக்கத்தில் மஞ்சுளா என்ற வாசகர், “உடலில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது எப்படி?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

இந்தியாவை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் அதிகம். இன்று வீட்டுக்கு ஒருவரையாவது இந்த நோயுடன் நம்மால் பார்க்க முடிகிறது. சர்க்கரை நோயின் பாதிப்பை எப்படித் தவிர்ப்பது, வந்தபின் எப்படிக் குறைப்பது என்பதே பலருடைய மனதிலும் தோன்றும் கேள்வி. மருத்துவரின் ஆலோசனையுடன் மிகக் கவனமாகச் சிகிச்சை மேற்கொண்டாலும் பல சந்தேகங்களும், கேள்விகளும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் நம்முடைய வாசகர் சர்க்கரை நோய் குறித்த மேற்கூறிய கேள்வியை நம்முடைய டவுட் ஆஃப் காமன் பக்கத்தில் எழுப்பியிருந்தார்.

வாசகரின் கேள்வி குறித்து பதிலை அறிந்து கொள்ள மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம், “சர்க்கரை நோயாளிகள் முதலில் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று வாழ்க்கை முறையிலும், உணவு முறைகளிலும் சில மாற்றங்களை மேற்கொள்வதுதான். அதில் முதலில் உடலில் இனிப்பைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது அதிக நன்மையைக் கொடுக்கும். டீ, காபி போன்ற பானங்களில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தற்போது பலர் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, சுகர் ஃப்ரீ, தேன், வெல்லம் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை அனைத்துமே நேரிடையாகவும், மறைமுகமாகவும் நம்முடைய உடலுக்கு இனிப்பைக் கொடுக்கக் கூடியது, சர்க்கரை நோயாளிகளுக்குத் தீமையை விளைவிக்கக்கூடியது. டீ, காபி என எதுவாக இருந்தாலும் ஒரு நாளில் 200 மில்லிக்கு மேல் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அடுத்தது கார்ஃப் (Carbs) உணவுகள் எனச் சொல்லப்படும் மாவுச் சத்துள்ள உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து உள்ளது என்றால் வெறும் அரிசி மட்டுமல்ல, இட்லி, தோசை சப்பாத்தியும் கூட . அதனால் அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது நல்லது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
காய்கறிகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் மண்ணுக்கடியில் விளையாத காய்கறியாக இருத்தல் அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். மிக மிக முக்கியமான விஷயம் 1 மணி நேரமாவது கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர்த்து, இடையில் பசிக்கின்ற நேரத்தில் கொய்யாக்காய், வெள்ளரிக்காய், தேங்காய் சில் போன்றவற்றை ஸ்னாக்ஸ் போன்று எடுத்துக் கொள்ளலாம். பிஸ்கட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றின் கூடவே மிக முக்கியமானது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது. நாமாக மற்ற சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவு நேரத்தில் இனிப்பான பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும். மிக முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை எப்போதுமே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை உடலுக்கு இனிப்பு சக்தியைக் கொடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில் உடலின் சர்க்கரையின் அளவு குறைப்பதற்கு அதிக பட்ச வாய்ப்புள்ளது.
இதே வழிமுறைகளைச் சர்க்கரை நோய் அல்லாதவர்களும் பின்பற்றும் பட்சத்தில் நீரிழிவு நோயில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். இது மட்டுமில்லாமல் மது, புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். தங்களுடைய உயரத்திற்கு ஏற்ற எடையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், சரியான தூக்கம் மிக அவசியம். வாழ்க்கை முறையில் இதுபோன்ற மாற்றங்களை மேற்கொண்டு, உணவில் சில விஷயங்களைத் தவிர்த்தாலே நீரிழிவு நோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்” மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
