Share on Social Media


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் வாதத்தின்போது அவரது பேச்சு அவமானப்படுத்துவது ஆகாதா?, திராவிட இயக்கம் இல்லாவிடில் அவர்கள் சுயமாக மேலே வந்திருக்கவே முடியாதா?, உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா?, சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதா? என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் இளைஞரணித் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே நீதிமன்றம் இந்த வழக்கில், தலைவர்கள் இதுபோன்ற வார்தைகளைப் பொதுவெளியில் பேசினால் மக்கள் மத்தியில் நீதித்துறை மீது எந்த மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பார்க்குமாறு எடுத்துரைத்தது.

அதேபோன்று, ஆர்.எஸ் பாரதியின் பேச்சு யார் வேண்டுமானாலும், சிபாரிசு இருந்தால் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப் போல் உள்ளதாகவும், இத்தகைய பேச்சுகள் மக்களுக்கு நீதித்துறையில் மீதுள்ள மாண்பைச் சீர்குலைத்துவிடும் எனவும் வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில், தன் மீதான வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது வாதத்தில், “ஆர்.எஸ்.பாரதி பேச்சில் திராவிட இயக்கத்தின் சிறப்புகளையும், இயக்கத்தின் பயனாய் கிடைத்தவற்றைப் பட்டியலிடவே அவ்வாறு பேசப்பட்டது. நீதிபதிகள் நியமனத்தைப் பற்றி மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் பேசியிருந்தார்.

நாட்டின் குடியரசுத் தலைவரையே கூட பட்டியலின் வகுப்பைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது தொடங்கி இப்படிப் பலவற்றைப் பற்றிய மேற்கோளில் நீதிபதிகள் நியமனம் குறித்த அவரது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அது அவமதிக்கும் நோக்கத்தோடு பேசப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி சதீஷ்குமார், “இது சரியான கூற்றா?, இது அவமானப்படுத்துவது ஆகாதா?, திராவிட இயக்கம் இல்லாவிடில் அவர்கள் சுயமாக மேல் வந்திருக்கவே முடியாதா?, உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா?, சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதா?, சமீபகாலங்களில் அரசியலில் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம் குறைந்து வருகிறது” என வருத்தம் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதத்தில், “பட்டியலினப் பழங்குடி மக்கள் யாருக்குமே திறமையே இல்லை என்பது போலவும், அவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்பது போலவும் ஆர்.எஸ்.பாரதி பேசினார். இவரின் பேச்சு ஒட்டுமொத்தமாக அந்தச் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏராளமான சமுதாயத் தலைவர்களும் இத்தகைய பேச்சுக்காக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் பேச்சின் வீடியோ ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளன. வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் மனுதாரர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்யுமாறு கோர முடியாது” என வாதிட்டார்.

புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, “ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மனுதாரர் உட்பட அச்சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் புண்படுத்தும் வகையில் உள்ளதால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது” என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *