Share on Social Media


இரண்டாண்டுகளுக்கு முன், மிகவும் சாதாரண இளைஞனான என்னை நம்பி ஓட்டளித்து, எம்.பி.,யாக்கிய என் தொகுதி மக்களுக்கு நேர்மையாக என் கடமைகளை செய்து, கடனை திருப்பிச் செலுத்தி வருகிறேன். எல்லாம் இறைவன் செயல்.-பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா

‘மருத்துவமனைகளில் படுக்கைகளை காலியாக வைத்து, ஏலம் விடுகின்றனர் என்ற விபரத்தை, உங்கள் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்திலேயே, தைரியமாக குரல் கொடுத்தீர்களே… உங்களை போல, பா.ஜ., – எம்.பி.,க்கள் அனைவரும் இருந்து விட்டால், இந்தியா வெகு சீக்கிரத்தில் முன்னேறி விடும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பெங்களூரு தெற்கு தொகுதி, பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை

தடுப்பூசியை பற்றி, சில கட்சியினர் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்; மறுபுறம் சில ஊடகங்கள், தங்கள் பங்கிற்கு மக்களுக்கு தடுப்பூசி பற்றி தவறான புரிதலை, பொறுப்பற்ற முறையில் ஏற்படுத்தி வருகின்றன; இது கண்டனத்திற்குரியது.-மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘எப்ப தான் இவர்கள் திருந்துவரோ என்ற கவலை, நம் மக்களுக்கே வந்து விட்டது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை

வெளிநாட்டு நிறுவனங்கள், மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை தர முடியாது என, கைவிரித்து விட்டன. மோடி அரசு, மாநிலங்களுக்கான கொள்முதலை, உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக நிதின் கட்கரி போன்ற மூத்த அமைச்சரை, தனி அமைச்சராக நியமித்து, மாநில நிர்வாகத்தோடு ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.-தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

‘மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தால் கூட, உங்களின் இந்த கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். எனவே உங்களின் அறிக்கை வீண் தான்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை

இலங்கையில், அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இருந்த தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. இது, மிகவும் கண்டனத்திற்குரியது.-நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘இலங்கையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு…’ என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற, தமிழக முதல்வர் ஸ்டாலினின் தேச விரோத கோரிக்கையை, ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளக் கூடாது.-பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி

‘ஸ்டாலினுக்கு எதிராக பாயத் துவங்கி விட்டீர்கள்; ஜோர். இனிமேல், தி.மு.க., பாடு கஷ்டம் தான்…’ என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிக்கை

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *