Share on Social Media


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இன்றுநடைபெறவிருக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்றைய தினம் அமெரிக்கா சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி முதல்முறையாக அவரை சந்திப்பதால் பிரதமர் மோடியின் அமெரிக்கா விஜயம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்தில் இறங்கிய நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதே போல், ஆண்ட்ரூஸ் தளத்தில் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் மோடி

அமெரிக்காவில் மோடி

அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்ட மேம்பாடு, கல்வி, சுகாதாரம், தொழில் நுட்பங்கள் மற்றும் பல்வேறு துறை ரீதியான ஆராய்ச்சிகள் குறித்து பல்வேறு நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு 7 மணி முதல் குவால்காம், அடோப், பிளாக்ஸ்டோன் மற்றும் பிற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து முதலீடுகள் குறித்து பல மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார்.

குவால்காம் நிறுவனத் தலைவர் கிறிஸ்டியானோ ஆர்.அமோனுடனான பிரதமர் மோடியின் சந்திப்பின் போது, இந்தியாவில் 5-ஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக குவால்காம் தலைவர் விருப்பம் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மோடியுடனான சந்திப்புக் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மார், “தொழில்துறை கொள்கைக்கும் வர்த்தகக் கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான சமநிலையை உருவாக்கப் பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இந்தியாவில் ஃபர்ஸ்ட் சோலார் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மார்

ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மார்

அதே போல், ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால் , “இது ஒரு சிறந்த சந்திப்பு. தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் வரும் கொள்கை சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கை மற்றும் முதலீட்டுக் கண்ணோட்டத்தில் இந்தியாவிடம் உள்ள சிறந்த சாத்தியக்கூறுகள் பற்றிப் கலந்தாலோசித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால்

ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *