Share on Social Media


அந்தப் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவர்களை முதல் பிரிவான `ஏ’ பிரிவிலும், சுமாராக படிப்பவர்கள் எனக் கருதப்படும் மாணவர்களை கடைசி பிரிவான `டி’ பிரிவிலும் போடுவார்கள். `டி’ பிரிவுக்கும் கீழ் ஒரு பிரிவு இல்லாத காரணத்தினால் தன்னை `டி’ பிரிவிலேயே போட்டதாக அவன் நினைத்துக்கொண்டான். தனக்கு எதுவுமே வராது என தீர்க்கமாக அவன் நம்பினான். அருமையான வீடு, அழகான உறவுகள், நிறைவான வசதி இருந்தும் தனிமை மட்டுமே அவனுக்கு துணையாய் இருந்தது. அந்த தனிமையே, அவனுள் அச்சம் எனும் விதையை நீருற்றி வேரூன்றி வளர்த்தது. அவன் பெயர் சரவணன், பயம் அவனுக்கு நெருங்கிய நண்பன்.

‘’உங்கள மாதிரி நடிகர்களோட பசங்க சிபாரிசுகளோடு வந்து சேர்றாங்க. யாரும் படிப்பை முடிக்க மாட்டேங்கிறாங்க. இன்னொருத்தர் படிக்க வேண்டிய இடத்தை எதுக்கு வீணாக்குறீங்க?’’ என லயோலா கல்லூரியின் முதல்வர் கேட்டபோது, ‘’என் பையன் அந்தமாதிரி இல்ல ஃபாதர். நிச்சயம் படிப்பை நல்லபடியா முடிச்சிடுவான்’’ என ஏதொவொரு நம்பிக்கையில் சொல்லிவிட்டார் சரவணின் அப்பா சிவக்குமார். கல்லூரியில் சேர்ந்து முதல் இரண்டு வருடங்களில் எல்லா செமஸ்டரிலும் ஒவ்வொரு பாடம் ஃபெயில். அப்பாவின் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டுமே? பயம் மீண்டும் எட்டிப்பார்த்தது.

பிறகு, எப்படியோ தட்டுத்தடுமாறி கல்லூரி படிப்பை முடிக்கிறார்… வாழ்க்கை இன்னும் வெறுமையாகிறது. உடன் படித்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல பணியில், பதவியில் அமர்ந்துவிட, நாம் என்ன செய்ய போகிறோம் எனும் அச்சம் அவரை அறையின் மூலையில் அமர்த்துகிறது. அப்பாவைப் போல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஒருபோதும் எண்ணங்கள் தோன்றவில்லை. தான் சிவகுமாரின் மகன் என சொல்லிக்கொள்ளாமல், சென்னையின் கார்மென்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும், எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்கிற பயம் சரவணனின் மனதுக்குள் கூடாரம் அடிக்கிறது.

சூர்யா – ஜோதிகா

சரவணனுக்கு தம்பி, தங்கை உண்டு. கார்மென்ட்ஸில்தான் நிறைய அக்காக்கள் கிடைத்தனர். அன்று உழைத்தால்தான் அடுத்த நாள் உணவு எனும் நிலையில், எல்லா கவலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காலை முதல் இரவு வரை கலகலப்பாக உழைத்து தீர்த்த அக்காக்களை பார்க்கையில் சரவணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அங்கு நிற்காமல் ஒடிக்கொண்டிருந்த அக்காக்களின் தையல் இயந்திரங்கள், சரவணின் மனதுக்குள் அச்சம் ஏற்படுத்திய கிழிசலையும் சேர்த்து தைத்து, கசிந்து கொண்டிருந்த கனவுகளை சேமிக்கத்த துவங்கியது. கார்மென்ட்ஸ் ஒன்று ஆரம்பித்து, அதில் நூறு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் எனும் கனவு பிறந்தது. எல்லாத் தொழிலுக்கும் ஒரு சூத்திரம் உண்டு. உழைப்பு அதில் பொது எனும் தெளிவு கிடைத்தது.

கார்மென்ட்ஸ் ஆரம்பிக்க, கோடி ரூபாயில் முதலீடு வேண்டும். அப்பா பெரும் நடிகரென்றாலும் தன் தேவைக்கு சம்பாதிப்பாரே தவிர, என்றைக்கும் ஆசைக்கு சம்பாதித்தது கிடையாது. உறவினர்களில் யாரும் கடன் தரும் நிலையில் இல்லை. இப்போது என்ன செய்ய? யதார்த்தம் அவர் நேருக்கு நேர் நின்று ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கையில் ஒரு வாய்ப்பு வருகிறது. மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு. கண்கள் நிறைய வேறு கனவுண்டு, நெஞ்சில் உழைக்கும் உரமுண்டு, பயணிக்க கால்களும் உண்டு. ஆனால், பாதைதான் இல்லை. வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார். தொழிலாளர் சரவணன், நடிகர் சூர்யாவாகிறார்.

ஒரு வார்த்தை தைரியமாக பேசத் தெரியாதவர், இனி பக்கம் பக்கமாக உணர்ச்சியோடு வசனம் பேச வேண்டும். நிமிர்ந்து நடக்க வராது, நேராக பார்க்கத் தெரியாது. அத்தனை ஆண்டுகளும் தனக்கு நண்பனாயிருந்த அச்சம், அதன் குரூரத்தை காட்டத் தொடங்கியது. நடிப்புக்கு போராட வேண்டியிருந்தது. நடனத்திற்கோ ஒரு யுத்தமே நடத்த வேண்டியிருந்தது. பார்ப்பவர்கள், `வாத்தியார் பையன் மக்கு’ என்கிறார்கள். வகுப்பறையில் ஒலித்த `மக்கு’ எனும் வார்த்தை படப்பிடிப்பு வரை பின் தொடரும் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு படக்குழுவினர் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தபோது, அசதியில் தூங்கிவிட்டார் சூர்யா. அவரை திடீரென தட்டி எழுப்பிய ரகுவரன், ‘’உனக்கு எப்படிடா தூக்கம் வருது?’’ என கேட்டிருக்கிறார். அந்த வார்த்தைகள் வலி மட்டுமல்ல வழியையும் சேர்த்தே கொடுத்தது.

முதல் படம், `நேருக்கு நேர்’ வெளியானது. ‘’படப்பிடிப்புக்கு அப்பா சிவகுமார் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறாரோ என்பது போல சூர்யா முகத்தில் ஏதோ ஒரு கூச்சம்! மென்மையான, இரக்கமேற்படுத்தும் முகம் அவருக்கு இருக்கிறது. அதை நினைவில் நிறுத்தி மேலும் புத்திசாலித்தனமாக ஹோம் ஒர்க் செய்துகொண்டு அவர் அடுத்த படத்துக்குப் போவது நல்லது!’’ – இது ஆனந்த விகடன் ‘நேருக்கு நேர்’ படத்துக்கு எழுதிய விமர்சனம். அடுத்தடுத்த படங்களும் நடித்தார். ‘’சூர்யா படம் தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ. தியேட்டரை விட்டு ஒடிடுது’’ என காதுபடவே கமென்ட் அடித்தார்கள். மீண்டும் தனிமை அரவணைத்துக் கொள்கிறது. இம்முறை தோல்விகள் எழுப்பும் கேள்விகளுக்குள் உழலாமல், அதற்கான பதிலைத் தேடத் தொடங்கினார். கார்மென்ட்ஸ் அக்காக்கள் சொல்லித்தந்த பாடம், சலிக்காத உழைப்பு. மீண்டும் நினைவுக்கு வந்து சேர்ந்தது.

WhatsApp Image 2021 01 22 at 9 57 49 PM Tamil News Spot
தம்பி கார்த்தி, தங்கை பிருந்தாவுடன் சூர்யா

‘சேது ‘ படம் ஓடிக்கொண்டிருந்த நேரம். சிவக்குமாரை காண அவர் வீட்டுக்கு செல்கிறார் இயக்குநர் பாலா. சந்திப்பு முடிகிறது. ‘’சூர்யா, டிரைவர் யாராவது இருக்காங்களா… பக்கத்துல என்னை டிராப் பண்ண முடியுமா?’’ என்கிறார் பாலா. ‘’நான் டிராப் பண்றேன்’’ என சொல்லி காரை எடுக்கிறார் சூர்யா. கார் சீராக சென்று கொண்டிருக்கிறது. சில வார்த்தைகளோ, தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்தன. கடைசியாக, அச்சம் அனைத்தும் கலைந்து, தன் மீது தானே பெரும் நம்பிக்கைக் கொண்டு ‘’சார், என் கேரியர்ல ஒரு படமாவது உங்களோட பண்ணனும்னு ஆசையா இருக்கு’’ என கேட்கிறார் சூர்யா. சட்டென நிமிர்ந்து பார்த்த பாலா, லேசான புன்னகையோடு ‘’அமையும்போது பண்ணுவோம். அடுத்த பட வேலைகள் நடந்துகிட்டு இருக்கு. சொல்றேன்” எனச் சொல்லி இறங்கிச் சென்று விட்டார்.

எந்த துறையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், சலுகையோ, இரக்கமோ, சிபாரிசோ நம்மைக் காப்பாற்றாது. தகுதி மட்டுமே நம்மைத் தக்க வைக்கும். பயன்படாத ஒன்று இங்கு யாருக்கும் தேவையில்லை. நம்மை நாமறிந்து, நம் மீது கொள்ளும் நம்பிக்கை மட்டுமே நம்மைக் காப்பாற்றும் என்பது எவ்வளவு பெரிய உண்மை என சூர்யாவுக்கு உணர்த்தியது `நந்தா’ பட வாய்ப்பு. இம்முறை படத்தில் நடிக்க இயக்குநரிடம் ஒப்புக்கொள்வது என்பதைத் தாண்டி, இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துவிடுவது என்பதைச் செய்தார். படம் வெளியானது. விமர்சகர்கள் சூர்யாவைக் கொண்டாடினார்கள். இயக்குநர்கள் வியந்தார்கள்.

‘’வித்தியாசமான கதையா, சூர்யா சரியா இருப்பான்’’ என திரையுலகம் சிந்திக்க வேண்டும் என லட்சியம் கொண்டு அயராது உழைத்தார். `காக்க காக்க’, ‘பிதாமகன்’, `பேரழகன்’, `ஆயுத எழுத்து’, `கஜினி’ என அடித்து ஆடினார். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, முறுக்கேறிய கைகள், அதில் கம்பீரமான ஒரு கடா என திரையில் வந்த அன்புச்செல்வனை, இளைஞர்கள் தன்னில் நகலெடுக்க முயன்றனர். இம்முறை, உதடு பிரியாமல் சிரிக்கும் நந்தா அல்ல பேசியே ஊரை விற்றுவிடும் சக்தி. இரண்டு பாத்திரங்களும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நம்பிக்கொடுத்தார் பாலா, செய்துகாட்டினார் சூர்யா. `பிதாமகன்’ படத்தில் சித்தன் கதாபாத்திரத்தை விட, சக்தி கதாபாத்திரம் நடிப்பதற்கு சவாலானாது. அதை அநாயசமாக செய்திருக்கிறார் சூர்யா என்றார்கள் பலரும். அப்படியே `பேரழகன்’ படத்தில் காட்டியதோ அடுத்தக்கட்ட முதிர்ச்சி. சின்னா (எ) பிரேம்குமாரை குழந்தைகளுக்கு பிடித்துப்போனது. ஒரே படத்தில் தன் நடிப்பால் வயிறு வலிக்க சிரிக்கவும் வைத்தார், மனசு வலிக்க அழவும் வைத்தார். `கஜினி’ மூலம் வணிக ரீதியாகவும் தான் ஒரு சிறந்த கதாநாயகன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

soorarai pottru tamil movie news Tamil News Spot
சூர்யா

சூர்யாவின் கண்களில் எப்போதும் கனவுகள் உள்ளது. கூடவே, தேடலும். முதலில் தனக்கான இடத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார். இன்று தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு என எண்ணிலடங்கா ரசிகர்கள் அவரது அன்புக்குரியவர்களாக அன்பான ரசிகர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் சூர்யாவை ரசிக்கிறார்கள். அத்தனை எளிதில் அடைந்துவிட முடியாத இந்த இடத்தை, நடிகரின் மகன் எனும் எந்த சலுகையோ, இரக்கமோ, சிபாரிசோ அன்றி தன் உழைப்பால் மட்டுமே பிடித்துக்காட்டிய கலைஞன், நடிப்பின் நாயகன் சூர்யா. இன்னும் அவர் கண்களில் தேடல் இருக்கிறது. ஒரு காலத்தில் சென்னையின் நீள, அகலங்களை அங்குலம், அங்குலமாக தன் பைக்கில் அளந்தது போல, சினிமாத்துறையின் நீள, அகலங்களை அங்குலம், அங்குலமாக அளக்கத் தொடங்கியிருக்கிறார்.

மாஸ் நாயகன் பிம்பத்தை அடையத்தான், அத்தனை ஹீரோக்களும் தவம் கிடக்கிறார்கள். எளிதில் கிடைத்திடாத அந்த பிம்பத்தை அர்ப்பணிப்பு எனும் மந்திரத்தால் அடைந்தவர் சூர்யா. ஆனால், அந்த பிம்பத்திற்குள் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் எல்லா விதமான கதை களங்களையும், கதாபாத்திரங்களையும் அவரால் செய்துபார்க்க முடிகிறதெனில் அது சினிமா எனும் கலையின் மீதான காதலும், அர்ப்பணிப்பும் மட்டுமே. `ஆறு’, `வேல்’, `அயன்’, `சிங்கம்’, `காப்பான்’ என மாஸ் படங்களில் முத்திரை பதிக்கும் அதே நேரம், `வாரணம் ஆயிரம்’, `24′, `சூரரைப் போற்று’ என அழுத்தமான, வித்தியாசமான கதைகளிலும் தன்னை வளர்த்தெடுக்கிறார். சூர்யா எனும் மாஸ் பிம்பம் கொண்ட நாயகன் தன்னை வளர்த்தெடுப்பது என்பது, தமிழ் சினிமாவையே வளர்த்தெடுப்பது.

இமேஜுக்குப் பின்னால் சென்றால், ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது எனும் பாடத்தை தெரிந்து வைத்திருப்பதால்தான் சூர்யாவால், `பசங்க-2′ போன்ற படத்திலும் நடிக்கமுடிகிறது. இடையில், தொடர்ந்து தோல்வி படங்கள் வந்து `சூர்யா இனி அவ்ளோதான்’ என காதுபட கமென்ட் அடித்தவர்களை, `சூரரைப் போற்று’ டீசரில் முகமெல்லாம் வியர்வை வழிய சுருட்டு பிடிக்கும் ஒற்றை காட்சி திருப்பி அடித்தது. வாத்தியார் பிள்ளை மக்கு, ஊர் குருவி பருந்தாகாது எனும் பழமொழிகள் பலவற்றை, சூர்யாவின் திரைபயணம் தவிடுபொடியாக்கியது.

soorarai potru 1 Tamil News Spot
சூர்யா

தோல்விகள் பல கண்டும் அவமானத்தில் கூனி குறுகாமல், கூன் விழுந்த முதுகுடன் குனிந்து நடித்தே சாதித்த வெறி, தனக்கான இடத்தை அடைய தன் உடலையும், மனதையுமே பகடையாய் வைத்து பரிசோதித்து பார்த்த வீம்பு, மாஸ் ஹீரோ ஆன பின்னும் வித்தியாசமான கதைகளை தேடிச்செல்லும் ஆச்சரியம், நடிப்பதைத் தாண்டி நல்ல படங்களை தயாரிக்கவும் இறங்கிய தைரியம், இது எல்லாவற்றையும் விட `ஒரு கலைஞனின் குரல் என்றும் சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற தெளிவு, அதில் அவர் முன்வைக்கின்ற கருத்துகள், இழப்பதற்கு ஒன்றுமில்லை, மீட்பதற்கோ சொர்க்கமே இருக்கிறது எனும் சிந்தனை இன்னும் எத்தனையோ குணங்கள் ஒன்றை மட்டுமே சொல்கிறது. சூர்யா, எதற்கும் துணிந்தவர்.

அன்று தனிமையே துணை, இன்று துணிவே துணை.

வாத்தியார் பையன் வாத்தியார் ஆவான். ஊர் குருவி பருந்தாகும்… ஆம், சூர்யா எதற்கும் துணிந்தவர்தான்!

தென்னிந்திய சினிமாவுலகின் துணிச்சலான கலைஞனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *