Share on Social Media


”பத்மபூஷண் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனாலும், 20 வருடங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருக்கணும்னு பேசிக்கிறாங்க. எப்படி உணர்றீங்க?”

”விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. மிகுந்த மரியாதையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இசைக்கும், தமிழ் இசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய கௌரவமாகக் கருதுகிறேன். திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. ‘அன்னக்கிளி’ ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூசிக் போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி, எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind, திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழையில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்… பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப் புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?

நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும்.

இளையராஜா

உலகத்தோட ஒரு பக்கத்துல பீத்தோவன், மொஸார்ட்னு இருந்திருக்காங்க. நம்ம பக்கம் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர்னு இருந்தாங்க. எல்லாமே 18-ம் நூற்றாண்டோடு முடிஞ்சுபோச்சு. அதற்குப் பிறகு இன்னொரு மொஸார்ட் வரவே இல்லை. உலகம் தோற்றுவிக்கலைன்னு அர்த்தம் கிடையாது. அந்த நிகழ்வு நடை பெறலை. புரந்தரதாசர் வரைக்கும் அவங்க பங்குக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டுப் போயாச்சு.

எனக்கு என்ன தோணுதுன்னா, இப்ப இருக்கிற கர்னாடக, இந்துஸ்தான், வெஸ்டர்ன் மியூஸிக்கோடு அதன் எல்லைகள் முடிஞ்சு போச்சா? இல்லைதானே! உண்மையான… இன்னும் உன்னதமான இசை எங்கேயோ இருக்கு. அந்த இசைதான் என் தேடுதலா இருக்கு. இதற்கு நான் பதில் அறியாமலும் போகலாம். ஆனா, என்னிக்காவது ஒரு நாள் இதுக்குப் பதில் கிடைக்காமல் போகாது. போய் ஊடுருவிப் பார்க்கிறவங்க கண்டுபிடிப்பாங்க. என் கையில் விதை இருக்கு. விதைக்காமல் போனால் வித்துக்கும் நஷ்டம்… உயிருக்கும் நஷ்டம்.

இந்த ஊரில் இருந்தே 200 பீத்தோவன், 200 தியாகராஜ சுவாமிகள் வரட்டுமே. வறுமையில் வாழ்ந்துட்டு இசை படைத்தவர் தியாகராஜ சுவாமிகள். இத்தனை தியாகராஜ சுவாமிகள் வரணும்னு சொன்னது திறமையைவெச்சுச் சொல்லலை. திறமைங்கிறது வித்வத்வம், பண்டித்துவம், அது கர்வத்தை மட்டுமே வளர்க்கும்.

என் அனுபவத்திலே நிறைய இருக்குன்னு சொல்லும்போது இதைத் தெரிஞ்சுக்க ஓர் அமைப்பு இல்லைங்கிறது என்னுடைய துரதிருஷ்டமா, நாட்டின் துரதிருஷ்டமா?

”பீத்தோவன், மொஸார்ட், பாக்னு எப்பவும் பெருமிதமா… உயர்வா பேசுவீங்க. நம்ம ஊர் இசையமைப்பாளர்களைப்பற்றி ஒண்ணும் சொன்னதே கிடையாதே?”

480003 Tamil News Spot
இளையராஜா

”இசை என்பது உன்னதமான கலை வடிவம். பீத்தோவன், பாக் போன்றவர்கள் நாம் பின்பற்ற வேண்டிய மேதைகள். நான் எனக்கு முன்னாடி ரோடு போட்டவர்களைப்பற்றித்தான் பேச முடியும். நான் ரோடு போட்டேன்னா, எனக்குப் பின்னாடி வர்றவங்க அதைப்பத்திப் பேசணும். யார் யாரு நான் போற பாதையெல்லாம் மரம் நட்டுட்டுப் போனாங்களோ, புத்தகம் வெச்சுட்டுப் போனாங்களோ, குடிக்கத் தண்ணீர் வெச்சுட்டுப் போனாங்களோ அவங்களை நான் போற்ற முடியும், வணங்க முடியும், தொட்டுக் கும்பிடவும் முடியும்.

ஆனா, எனக்குப் பின்னாடி வர்றவங்களை நான் ஃபாலோ பண்ண முடியாது, இல்லையா? எனக்குப் பின்னாடி வர்றவங்களை எனக்குத் தெரியவே இல்லை. எனக்கு முன்னாடி போனவங்களைப் பார்த்து, ‘ஐயோ! இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே, இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே’ன்னு வியந்துகிட்டே இருக்கேன். இன்னும் அவங்க பக்கத்தில் என்னால் நெருங்க முடியலை. ஒரு சி.ஆர்.சுப்பராமன் பண்ணின ‘சின்னஞ்சிறு கிளியே’ போல இன்னும் யாராலும் ட்யூன் பண்ண முடியலை. அந்தப் பாட்டு ட்யூன் பண்ணி 60 வருஷம் ஆச்சு. எல்லா கர்னாடகக் கச்சேரிகளிலும் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடறாங்க. சினிமாவில் இருந்து கர்னாடக கச்சேரிக்குப் போகிற அளவுக்கு அந்த ஆளு ட்யூன் பண்ணிட்டு 32 வயசுலயே போயிட்டார். அவரைப் போற்றாமல் வேறு யாரைப் போற்ற?

எனக்கு எஸ்.வி.வெங்கட்ராமனைத் தெரியும். பார்த்திருக்கேன். அவர் என்னைப் பாராட்டினார். நான் அவர் காலைத்தொட்டு வணங்கினேன். இந்தத் தலை முறையில் யாரைப் பாராட்டலாம்னு நீங்களே சொல்லுங்க?”

”ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிட்டார். அவர் மியூஸிக்பற்றி உங்க கருத்து என்ன?’

”அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் என் பேச்சைக் கேட்கலையா? அப்புறம் ஏன் இந்தக் கேள்வி? உலகம் அங்கீகரிச்சப்பிறகு நான் யாரு? உலகத்தில் ஒருத்தன்தானே நான்! உலகத்தைவிட்டுத் தனியாவா நான் இருக்கேன்?”

”எப்பவாவது இந்த மியூஸிக்கை நிறுத்திடணும்னு தோணியிருக்கா?”

9965 Tamil News Spot
இளையராஜா, ரஜினி

”இப்பவும் ஒரு பாட்டு முடிஞ்சதும் மியூஸிக்கை நிறுத்திடுவேனே. (சிரிப்பு)’’

”இறைவனிடம் சரண் அடைய எப்பவும் விருப்பப்படுகிறவர் நீங்கள். ஆனாலும், நீங்கள் ஈகோ உடையவர், அதிக இறுக்க மானவர்னு உங்களைப்பற்றிப் பேச்சிருக்கு. இந்த இரண்டு அம்சங்களுக்கும் முரண்பாடு காணப்படவில்லையா?”

”உங்களுக்கு இருக்கிற ஈகோவால்தானே இந்தக் கேள்வியையே கேட்க முடியுது. இந்தக் கேள்வியே உங்களுக்கு இருக்கிற ஈகோவைக் காட்டுதே தவிர, பண்பைக் காட்டலை. இருக்கட்டும். ஈகோ இல்லாமல் நான் எப்படி வேலை செய்ய? உங்களுக்கு ஏன் ஈகோ இருக்குன்னு ஈகோ இல்லாத ஆளுதானே கேட்கணும்? அப்படிக் கேட்டால், ‘உங்களை மாதிரி ஆக முடியலை சாமி!’ன்னு சொல்வேன். சரியாகச் சொன்னால், ‘உன்னை முதல்ல பார்த்துட்டு வாய்யா… போய்யா!’ன்னு சொல்லணும்… சொல்லவா!” (மீண்டும் சிரிப்பு)Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *