Share on Social Media


சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம்.

`வயது 58 ஆகியும் எனது முடி நரைக்கவில்லை. ஆனால் 28 வயதிலே உனக்கு இத்தனை முடிகள் நரைத்துவிட்டதே’ என்று யாராவது ஒரு இளம் பெண்ணை பார்த்து சொன்னால், அவர் வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக தனது கூந்தலைத்தான் ஆராய்வார். நரைத்திருக்கும் தனது முடிகளை கண்ணாடியில் பார்த்தால், முடியை விட நீளமாக அவருக்கு எரிச்சல் ஏற்படும். அதற்கு காரணம் நரை, முதுமையின் அடையாளமாக கருதப்படுவது தான். அப்படி எரிச்சல்கொள்ளும் பலருக்கும் எதனால் இளமையிலே நரை ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணம் தெரிவதில்லை. அடிப்படையை தெரிந்துகொண்டால் பெரும்பாலானவர்களால் அகால நரைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கறுப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும். ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது.

மெலானோசைட் திசுக்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே நரைக்கும். மூதாதையருக்கு இளம் வயதிலேயே நரைத்தால், பாரம்பரியமாக அது இளந்தலைமுறைக்கும் தொடரும். இன்னொரு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. புரோட்டின், இரும்பு, தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவைகளில் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலோ குறைபாடு ஏற்பட்டாலும் அகால நரை தோன்றும். முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்க மேற்கண்ட சத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் (ஹைப்பர் தைராய்டிஸம்), குறைவாக சுரந்தாலும் (ஹைப்போ தைராய்டிஸம்) இளமையிலே முடி நரைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கக்கூடிய ஆட்டோ இம்யூன் வகையை சார்ந்த நோய்களாலும் நரை தோன்றும். மலேரியா போன்ற சில நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளும் தற் காலிகமாக நரையை உருவாக்கலாம். அத்தகைய மருந்துகளை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்பு இயல்புநிலைக்கு மாறிவிடவும் கூடும். பதற்றம், மனஅழுத்தம், புகையிலை பயன்பாடு போன்றவைகளாலும் விரைவில் நரை தோன்றும்.

முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வை யும், அகால நரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.

சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம். பத்து வயது வரை சிறுவர், சிறுமியர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்கிவருவது மிக முக்கியம். கர்ப்பிணிகள் தங்கள் வயிற்று சிசுவின் முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகளை தொடக்க மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வருவது அவசியம்.

குழந்தைகளின் உடலில் யுமெலானின், பியோமெலானின் என்ற இரண்டு வகை மெலானின் இருக்கிறது. கறுப்பு மற்றும் பிரவுன் முடிக்கு யுமெலானின் காரணம். சில குழந்தைகள் பிரவுன் முடியுடன் தோன்றுவார்கள். அதற்கு யுமெலானின் மாறுபட்ட தன்மையே காரணமாக இருக்கிறது.

பரிசோதனையும், சிகிச்சையும்..

அகால நரைக்கு சிகிச்சை பெற விரும்புகிறவர்கள், முதலில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சத்துக்குறை பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதோடு, தைராய்டு பாதிப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும்.

சத்துக்குறைபாடு, ஹார்மோன்களின் சீரற்ற நிலை போன் றவைகள் தெரியவந்தால் அதற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துணவுகளையும் சாப்பிடுவது அவசியம்.

அகால நரை பாரம்பரியத்தால் ஏற்பட்டது என்றால் அதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நரை முடிக்கு கறுப்பு நிறம் தருவதற்கு பயோட்டின், கால்சியம் பாந்தோதெனேட்டட், பாரா அமினோ பென்சோயிக் ஆசிட் போன்ற மருந்துகள் ஏற்றது.

முடியின் வெளிப்பகுதியில் பூசுவதற்கு ஸொராலென் வகை மருந்துகள் ஏற்றது. அதனை பூசிவிட்டு சிறிது நேரம் வெயிலில் நின்றால், முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்கும்.

எந்த மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். டாக்டர் குறிப்பிடும் அளவில்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். இணையதளத்தை பார்த்து சுய சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கி விடும்.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *