Share on Social Media


கோவை:கோவை மாநகராட்சி, 99, 100வது வார்டுகளில் கழிவு நீரை சேகரித்து, பரீட்சார்த்த முறையில், வெள்ளலுார் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.குறிச்சி, குனியமுத்துார் பகுதியில், 87-100வது வார்டு வரை, 14 வார்டுகளுக்கு பிரத்யேகமாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணியை, குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்கிறது.

குழாய் பதிப்பது மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது என, இரு பணிகளாக பிரித்து செய்யப்படுகிறது.குழாய் பதிக்கும் பணி, 70 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 90 சதவீதம் முடிந்திருக்கிறது.இயந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவற்றை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார். திட்ட செயல்பாடு தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மதியழகன் விளக்கினார்.

பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.அதனால், பொள்ளாச்சி ரோட்டில், ஆத்துப்பாலம் முதல் ஈச்சனாரி வரை, பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பது தாமதமாகி வருவதாக, கமிஷனரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு கடிதம் எழுதி, தீர்வு காணலாம் என, கமிஷனர் தெரிவித்தார்.சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி முழுமையாக முடியும் வரை காத்திருக்காமல், பகுதி பகுதியாக கழிவு நீரை கொண்டு வந்து, சோதனை முறையில் இயக்கிப் பார்க்கலாம் என, கமிஷனர் அறிவுரை வழங்கினார்.
அதன்படி, முதல்கட்டமாக, 99 மற்றும், 100வது வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வீட்டு இணைப்பு வழங்கி, கழிவு நீரை சேகரித்து, சுத்திகரிப்பு மையத்தை, வரும் நவ., – ஜன.,க்குள் இயக்க, முடிவு செய்யப்பட்டது.அடுத்த கட்டமாக, குறிச்சி, சுந்தராபுரம், போத்தனுார் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படும். இறுதியாக, குனியமுத்துார் பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளலுாரில், தினமும், 3 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ள அறிவுரையை பின்பற்றி, சிங்கப்பூர் டெக்னாலஜியை பயன்படுத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கப்படும்.சுத்திகரித்த நீரை, விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம்; குடிக்கக் கூடாது. திட்டத்தை செயல்படுத்த, 2023, மார்ச் இறுதி வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை காத்திருக்காமல், பகுதி பகுதியாக இணைப்புகள் வழங்கி, சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படும்’ என்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *