Share on Social Media


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது.

மீதமுள்ள கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை 9ம் தேதி நடக்கிறது.இங்கு 1,554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 195 ஊராட்சித் தலைவர்கள், 91 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 1,849 பதவியிடங்கள் உள்ளன. இதில், 265 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 8 மாவட்ட கவுன்சிலருக்கு 49 பேர், 88 ஒன்றிய கவுன்சிலருக்கு 337 பேர், 180 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 605 பேர், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 4,019 பேர் என மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தேர்தலையொட்டி, 198 மண்டல அலுவலர்கள், 6,393 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக 5 ஒன்றியங்களில் 950 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பி.டி.ஓ., அலுவலகங்களில் இருந்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டி, ஓட்டுச்சீட்டு, அழியா மை, சாக்கு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக 66 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், நாளை 9ம் தேதி இரவு போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப் பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பொருட்களை ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக 31 சிறப்பு வாகனங்களும் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில், பதற்றமான 52 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராவும், 49 ஓட்டுச்சாவடிகளில் வீடியோ பதிவும், 50 ஓட்டுச்சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாடு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 849 ஓட்டுச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள தேர்தலில், 2 லட்சத்து 44 ஆயிரத்து 724 ஆண்கள், 2 லட்சத்து 45 ஆயிரத்து 270 பெண்கள், 101மூன்றாம் பாலினத்தவர் என 4 லட்சத்து 90 ஆயிரத்து 95 வாக்காளர்கள் தங்களது ஓட்டினை பதிவு செய்ய உள்ளனர்.அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது ஓட்டுரிமையை பதிவு செய்யலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *