Share on Social Media


ஆப்கனில், தலிபான்களை ஒடுக்க அமெரிக்க விமானப்படை வரவுள்ளது. அதன் விமானங்களுக்கு அண்டை நாடான நம் நாட்டின் விமான நிலையங்களில் பெட்ரோல் நிரப்பலாம். இதை நான், 1990 – 91ல் சந்திரசேகர் அரசின் போது செய்தேன். இதன் மூலம் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியும்.
– பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி

‘அப்போது இருந்த பொருளாதாரம், அதை அனுமதித்து இருக்கலாம். இப்போது, இந்தியாவே மிகப் பெரிய பொருளாதாரம் என்பதை மறந்து, இப்படி அறிவுரை கூறுகிறீர்களோ…’ என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.

காங்கிரஸ் கணக்குகளை, ‘டுவிட்டர்’ தற்காலிகமாக மூடியுள்ளது. இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இந்திய மக்கள் நிரந்தரமாகவே காங்கிரசை மூடி விட்டனர்
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘அடடா, உண்மையை எப்படி, இப்படி எதுகை, மோனையுடன் கூறுகிறீர்கள்…’ என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

கொரோனாவில் தேர்தல் நடக்கும்; ஓட்டு எண்ணிக்கை நடக்கும்; பதவி ஏற்பு விழா நடக்கும்; சட்டசபையும் நடக்கும்; உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால் கிராம சபை மட்டும் நடக்காது.
– நடிகர் கமல் ஹாசன்

‘கிராம சபை நடத்தப்படவில்லை என்பதில் உங்களுக்குத் தான் எவ்வளவு வருத்தம். ஆட்சிக்கு வந்ததும், இதை முதலில் சரி செய்து விடுங்கள்…’ என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் அறிக்கை.

இவ்வளவு நிதி நெருக்கடியிலும், எந்த துறைக்கும் நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் இருப்பது, முதல்வரின் நெஞ்சில் ஈரமும், ஏழைகளின் மீதுள்ள அவரின் கரிசனம் நிறைந்த கருணையையும் வெளிப்படுத்துகிறது.
– தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

‘அடேங்கப்பா… எப்படி, இப்படி உங்களால் கட்சி கட்டுப்பாட்டையும் மீறி, வானளாவ முதல்வரை பாராட்ட முடிகிறது… எல்லாம் பதவி கிடைத்ததாலா…’ என, கூறத் துாண்டும் வகையில், தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளை கண்டித்து, பா.ஜ., – எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையை பார்த்தேன். இப்படித் தான் பலரும் அரசியல் என்ற போர்வையில் வெளிப்படையாக ஊழலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
– அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்

‘சோதனை, அரசியல் ரீதியாக நடத்தப்படுகிறது என்பதை அறிந்ததால், அப்படி சொல்லியிருப்பாரோ…’ என, கூறத் துாண்டும் வகையில், அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அறிக்கை.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், மாநிலத்தின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
– தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்

‘இப்படித் தான் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சொல்லப்படுகிறது. ஆனாலும், நிலைமை மாறவில்லையே…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை.

போராடும் விவசாயிகளுடன் மோடி அரசு பேச்சு நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் போராட்டம் விரிவடையும்; அடுத்த கட்ட எல்லைகளையும் தாண்டும்.
– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன்

‘எத்தனை முறை தான் இப்படி மிரட்டுவீர்கள்; எதற்கும் மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லையே. விவசாயிகள் போராட்டம், கம்யூ.,க்களுடையது என்பதை பிரதமர் நன்கு அறிந்து கொண்டாரோ…’ என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பேச்சு.

முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு துரோகம் செய்த பலரும், தி.மு.க.,வுக்கு ஓடுகின்றனர். இதனால், துரோகிகளின் கூடாரமாக தி.மு.க., மாறி வருகிறது. உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, அ.தி.மு.க.,வை யாராலும் அசைக்க முடியாது.
– அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி

‘நம்பிக்கை தான் பலம்; அப்படியே இருங்கள். ஆனாலும், அ.தி.மு.க., கூடாரம் கலகலத்து வருகிறதே…’ என, கவலை தெரிவிக்கத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு.

தேர்தலுக்கு முன், மக்கள் வாங்கிய கடன் அனைத்தும் தள்ளுபடி என்போம். தேர்தலுக்கு பின், கடனே வாங்காதவருக்கும் உன் பெயரில் கடன் பாக்கி இருக்கு என்போம். தி.மு.க.,வின் செயல்பாடு இப்படித் தான் இருக்கிறது.
– தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்

‘ஓட்டுகளை வாங்க அப்படி சொல்வோம்; பதவிக்கு வந்த பிறகு தர மாட்டோம் என்றா சொன்னோம்… செய்வதைத் தான் சொல்வோம் என்கின்றனர், தி.மு.க.,வினர்’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம்; விவாதங்களை அனுமதிக்க மாட்டோம்; மாற்றுக் கட்சித் தலைவர்களின், ‘டுவிட்டர்’ கணக்குகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றனர்?
– நடிகர் கமல் ஹாசன்

‘எல்லாம் அரசியல் தான் கற்றுக் கொடுத்தது. கற்றுக் கொள்ள நீங்களும் தான் வந்துள்ளீர்களே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் அறிக்கை.

மதுரையில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை துவக்கப்பட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். எனினும், அதற்கான நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்காமல் உள்ளது.
– தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்

‘முதல்வரான பிறகு போராட முடியாது. இல்லையேல், கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்து போராடியிருப்பார்…’ என, கூறத் துாண்டும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.

பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்கே சென்றனர். ஒரு நாள் கூட அவர்கள் சபைக்கு வரவில்லை.
– திரிணமுல் காங்., – எம்.பி., டெரிக் ஓ பிரையன்

‘அவர்கள் இருவரும் சபையில் இருந்தால், இன்னும் சத்தம் அதிகமாக போட்டு, ரகளையை கூட்டலாம் என நினைக்கிறீர்களா…’ என, மடக்கத் தோன்றும் வகையில், திரிணமுல் காங்., – எம்.பி., டெரிக் ஓ பிரையன் பேட்டி.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *