Share on Social Media


‘சினிமா பண்டி’ என்கிற ஒரு தெலுங்கு படம் கடந்த மே 14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ, இயக்குநரோ என எதுவுமே இல்லை. ஆனால், இந்தப்படம்தான் சமூக வலைதளங்களில் ஒரு வாரம் பேசுபொருளாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிய புகைப்படங்கள், மீம்கள், ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்டன. இதனால், இந்தப்படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கைக் கூடியது. படம் ஓடிடி-யில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

திரையரங்கில் இந்தப்படம் வெளியாகியிருந்தால் இந்தக் கதாநாயகன், நாயகி, இயக்குநருக்கு இப்படி ஒரு விளம்பரமும், புகழும் நிச்சயம் கிடைத்திருக்காது. ஆனால், ஓடிடி அதனை சாத்தியமாக்கியிருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தால் நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் திறமையை தாண்டி பல விஷயங்கள் ஒரு சாமான்ய ரசிகனால் பேசப்படாது. ஆனால், ஓடிடி ஒவ்வொரு படத்தையும் மிக நுணுக்கமாக ஆராயும் திறனை ஒவ்வொரு சாதாரண ரசிகனுக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது. படத்தின் மேக்கிங் பற்றி, கேமரா கோணங்கள் பற்றி, எட்டிங் பற்றி, சவுண்ட் மிக்ஸிங் பற்றி எனப் பல விஷயங்களையும் அலசி, அதில் ஒரு சிறு குறையிருந்தாலும் அந்தப்படத்தை தவிர்க்கும் பழக்கத்தை ஓடிடி உருவாக்கியிருக்கிறது.

சினிமா பண்டி (Cinema Bandi)

சினிமா பண்டி (Cinema Bandi)

ஒரு ஹீரோ இதுவரை தன்னுடைய தனிப்பட்ட புகழையும், பெருமையையும் பறைசாற்றிக் கொள்ள சினிமாவைப் பயன்படுத்தினார். தனிப்பட்ட ஒரு நடிகரின் நம்பிக்கைகள், அவரது அரசியல் கருத்துகள், போட்டி நடிகர்களுக்கு அவர் சொல்லும் பன்ச் வசனங்கள் என படம் முழுக்க அந்த ஹீரோவை சார்ந்தே இருக்கும். ஆனால், ஓடிடியில் ஒரு நடிகர் தன்னை முன்னிலைப்படுத்தி சினிமாவை உருவாக்கிவிட முடியாது. அப்படி எடுக்கப்படும் படங்கள் இடதுகையால் புறந்தள்ளப்படும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தாண்டு தியேட்டரில் வெளியாகி அடுத்த 15 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்த விஜய்யின் ‘மாஸ்டர்’ ஓடிடியில் எதிர்பார்த்த அளவு கொண்டாடப்படவில்லை. இந்தப் படம் குறித்த கருத்துகளோ, விமர்சனங்களோ, மீம்களோ எதுவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவில்லை. ஆனால், தியேட்டர்களில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடிக்கு வந்த ‘கர்ணன்’ படத்தைப் பற்றிய விமர்சனங்கள், கருத்துகள், அதுபற்றிய விவாதங்கள் எல்லாம் தியேட்டரில் ரிலீஸான நேரத்தை காட்டிலும், ஓடிடியில் ரிலீஸான போது அதிகம் இருந்தது. மொழி எல்லைகளைக் கடந்து இந்தப்படம் கொண்டாடப்பட்டது, விமர்சிக்கப்பட்டது.

வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’ படம் அதிக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தனுஷ் இதில் நடித்திருக்கிறார் என்பதற்காக அல்ல, இந்தப்படத்தின் கதையும், மேக்கிங்கும் எப்படியிருக்கிறது என்று விமர்சிப்பதற்காக! மாஸ் ஹீரோ விஷயங்கள் படத்தில் தூக்கலாக இருந்தால் இந்தப்படமும் ஓடிடி பயனர்களால் நிராகரிக்கப்படும் என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.

நாயகனுக்கு ஆரத்தி எடுப்பது, ஆளுயர மாலை போடுவது, பால் அபிஷேகம் செய்வது என்பதெல்லாம் இனி இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இனி படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்பவது கன்டென்ட்டும், மேக்கிங்கும், நடிகர்களின் நடிப்பும் மட்டுமே!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *