Share on Social Media


சென்னை: இந்த மாதத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் நேற்று வரை 21.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 93.41 லட்சம் மட்டும்தான். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத எண்ணிக்கை. தமிழகத்திற்கு போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படாதது தான் இதற்கு காரணம்.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியமாகும். அந்த இலக்கை அடைய வேண்டுமானால், இனி வரும் நாட்களிலாவது தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்திற்கான ஜூன் மாத தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, தமிழகத்திற்கு ஒரு கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குவது மட்டுமே நியாயமான ஒதுக்கீடாக இருக்கும். தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் ஒரு கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக 42.25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவது நியாயமற்ற செயலாகும். எந்த அடிப்படையிலும் இல்லாமல் தமிழகத்திற்கான தடுப்பூசிகளை குறைத்து, பிற மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வழங்குவதை ஏற்க முடியாது. தமிழகத்தின் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு நேரடி ஒதுக்கீட்டின் மூலமாகவும், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *