Share on Social Media


புற்றுநோயின் அறிகுறியை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை ஜெம் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய ‘நலமாய் வாழ…’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, சென்னை ஜெம்ஹாஸ்பிடல் உடன் இணைந்து ‘நலமாய் வாழ…’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடந்தது. ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்’எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது:

ஜெம் ஹாஸ்பிடலின் சேர்மன்டாக்டர் சி.பழனிவேலு: புற்றுநோய்என்றாலே அதுவொரு உயிர்க்கொல்லி நோய், அதிலிருந்து மீள்வது கஷ்டம் என்றே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். புற்றுநோயும் சாதாரண ஒரு நோய் போல்தான். அதை வராமல் தடுக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம்.

உலகிலேயே அதிக மக்கள் இறப்பதற்கான காரணங்களில் 2-வது இடத்தில் புற்றுநோய் உள்ளது. புற்றுநோய்க்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. பல மாதங்கள், வருடங்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தெரியும். அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சையை பெற்றால்முழுமையாக குணப்படுத்திவிடலாம். சில பெற்றோருக்கு புற்றுநோய் இருந்தால் அது அவர்களது குழந்தைகளுக்கும் வரக்கூடும். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக நவீன மருத்துவ லேபராஸ்கோப் சிகிச்சையை 1991-ல் பித்தப்பை புற்றுநோய் சிகிச்சைக்கும்,1993-ல் மலக்குடல் புற்றுநோய்க்கும் பயன்படுத்தினோம்.

அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுக்குள், வயிற்றில் உண்டாகும் அனைத்து புற்றுநோய்களுக்கும் லேபராஸ்கோப் சிகிச்சையைப் பயன்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்திவிடலாம்.

குடல்புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.செந்தில்நாதன்: புற்றுநோய் என்றதுமே ஒரு எதிர்மறையான எண்ணம் பலரிடமும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும் மக்களுக்கு புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை பெறாமல்முற்றிய நிலையில் வரும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது சவாலாக உள்ளது. இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோயின் தாக்கம் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இருப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோயின் தாக்கமும், ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு மலக்குடல் வாய் புற்றுநோயின் தாக்கமும் அதிகம். ஆனால், இந்தியாவில் அனைத்து வகை புற்றுநோய்களின் தாக்கமும் இருக்கிறது.

புற்றுநோய்க்கான சிகிச்சை முறை அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு மாற்றங்களோடு முன்னேறி வருகிறது. இன்றைய நவீனமருத்துவ சிகிச்சை முறையினால் என்டோஸ்கோபி மூலமாக உடனுக்குடன் புற்றுநோயின் தாக்கத்தை கண்டறிய முடிகிறது. புற்றுநோய் வந்தால் கவலைப்பட வேண்டாம்.

பெரிய அறுவை சிகிச்சையேதும் இல்லாமலேயே புற்றுநோய் கட்டியை வேரோடு எடுக்கும் நவீனஅறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் சென்னையிலுள்ள ஜெம்ஹாஸ்பிடல் சிறப்பான சிகிச்சையைஅளித்துவருகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோயிலிருந்து மீண்டு, இரண்டாவது வாழ்க்கை வாழ தயாராகலாம்.

ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கு.சிவராமன்: ஐரோப்பாவிலும் வளர்ந்த நாடுகளிலும் முதல்நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குணப்படுத்தி விடுகிறார்கள். நம் நாட்டில் இன்னும் அப்படியான முறை வளரவில்லை. இப்படியான நிகழ்ச்சிகள் மூலமாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் சேர்க்க முடியும். புற்றுநோய் வந்தபிறகு அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகள் இன்று பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. அதிக ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும்உடையவர்களுக்கு அடுத்த படிக்கட்டாக புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.

ராசாயன பொருட்கள் அதிகமாககலக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வது, புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய காரணங்கள் புற்றுநோய் வருவதற்கான காரணிகளாகின்றன. வெள்ளைச் சர்க்கரை எனப்படும் சீனியை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் மட்டுமின்றி, புற்றுநோயும் வரக்கூடும். நம் உணவில் இயன்றவரை சிறுதானியங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் சமைத்த உணவையே அதிகம் உட்கொள்ள வேண்டும். தேவையற்ற அச்சங்களை விலக்கி, முறையான சிகிச்சைபெற்றால் புற்றுநோயை நாம் வெற்றி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வைக் காண தவறவிட்டவர்கள் https://bit.ly/3iojlJr என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *