Share on Social Media

வொர்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்து மிதாலி புதிய சாதனை படைத்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–2 என ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி வொர்செஸ்டரில் நடந்தது. மழையால் போட்டி தாகமதமாக துவங்கியது. தலா 47 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

இங்கிலாந்து அணிக்கு டாமி பியுமான்ட் (0) ஏமாற்றினார். லாரன் வின்பீல்டு–ஹில் (36), கேப்டன் ஹீதர் நைட் (46), நாட் ஸ்சிவர் (49) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 47 ஓவரில் 219 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

மிதாலி அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (19) சுமாரான துவக்கம் தந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா (49) அரைசத வாய்ப்பை இழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (16), தீப்தி சர்மா (18) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் மிதாலி ராஜ், இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ அரைசதமடித்தார். இவருக்கு, ஸ்னே ரானா (24) ஒத்துழைப்பு தந்தார்.

 

இந்திய அணி 46.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிதாலி (75), ஜுலன் கோஸ்வாமி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

புதிய சாதனை

 

அபாரமாக ஆடிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 75 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இவர், தனது 12வது ரன்னை கடந்த போது டெஸ்ட், ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி–20’ என, மூன்று வித போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன் எடுத்த வீராங்கனை பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட்டி எட்வர்ட்சை (10,273 ரன்) முந்தி முதலிடம் பிடித்தார்.

மிதாலி இதுவரை 11 டெஸ்டில் 669 ரன், 217 ஒருநாள்  போட்டியில் 7304 ரன், 89 சர்வதேச ‘டுவென்டி–20’யில் 2364 ரன் என, மொத்தம் 10,337 ரன் குவித்துள்ளார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *