Share on Social Media

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சம் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

ஜப்பானின் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி வரும் 23 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 33 விளையாட்டுகளில் 50 பிரிவுகளில் 339 போட்டிகள் நடக்கவுள்ளன. 206 நாடுகளில் இருந்து 11,091 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் பங்கேற்பவர்கள் பட்டியல் வெளியானது. 

67 வீரர்கள், 53 வீராங்கனைகள் என மொத்தம் 120 பேர், 18 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கடந்த 2016ல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அதிகபட்சமாக 117 பேர் (63 வீரர், 54 வீராங்கனைகள்) பங்கேற்ற நிலையில் முதன் முறையாக தற்போது அதிகபட்சம் 120 பேர் களமிறங்க காத்திருக்கின்றனர். அதிகபட்சம் ஹாக்கியில் 32, தடகளத்தில் 26, துப்பாக்கிசுடுதலில் 15 பேர் பங்கேற்க உள்ளனர்.

பதக்கம் வருமா

உலக ஹாக்கி தரவரிசையில் ‘நம்பர்–4’ இடத்திலுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இம்முறை பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் உள்ளது. வில்வித்தையில் ‘ரீகர்வ்’ பிரிவில் சமீபத்திய உலக சாம்பியன்ஷிப்பில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்ற தீபிகா குமாரி, இவரது கணவர் அடானு தாஸ், பாட்மின்டனில் சிந்து, மேரி கோம் (குத்துச்சண்டை), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), துப்பாக்கி சுடுதலில் மனு பாகர், சவுரப் சவுத்ரி, மணிகா பத்ரா (மணிகா பத்ரா) உள்ளிட்டவர்கள் மீதும் பதக்க எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் 7 பேர் ‘பிரீஸ்டைல்’ போட்டிகளில் மட்டும் பங்கேற்கின்றனர். இதில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் பதக்கம் வெல்வர் என நம்பப்படுகிறது. டென்னிசில் போபண்ணா, திவிஜ் சரண் தகுதி பெறாததால், பெண்கள் இரட்டையரில் மட்டும் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா ஜோடி களமிறங்குகிறது. 

தமிழகம் ‘13’

தமிழகத்தில் இருந்து ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன், ரேவதி, தனலட்சுமி, சுபா என தடகளத்தில் 5, நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் (பாய்மர படகு) என படகு போட்டியில் 4, அஜந்தா சரத் கமல், சத்யன் என டேபிள் டென்னிசில் 2 தவிர பவானி தேவி (வாள் சண்டை), இளவேனில் (துப்பாக்கிசுடுதல்) என 13 பேர் டோக்கியோ ஒலிம்பிக் செல்கின்றனர். 

 

சுலப சுற்றில் சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிந்து, சாய் பிரனீத் சுலப பிரிவில் உள்ளனர். பெண்கள் ஒற்றையரில் சிந்து, ‘ஜே’ பிரிவில் ஹாங்காங்கின் செயுங் நிகன் யி, இஸ்ரேலின் கேசேனியா பொலிகார்போவாவுடன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையரில் சாய் பிரனீத் ‘டி’ பிரிவில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ், இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மனுடன் இடம் பெற்றுள்ளார். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

 

டோக்கியோவில் ‘எமர்ஜென்சி’

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்குப் பின், வரும் 23ல் துவங்க உள்ளது. இதைக் காண உள்ளூர் ரசிகர்கள் அதிகபட்சம் 10,000 பேர் வரை அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டது. ஆனால் டோக்கியோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 673ல் இருந்து 896 ஆக அதிகரித்துள்ளது. இதனால் வரும் ஆக. 22 வரை அவசரநிலை (‘எமர்ஜென்சி’) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ரசிகர்கள் ‘டிவி’யில் மட்டும் தான் பார்த்து ரசிக்கலாம்.

 

பல கோடிகள் செலவு

ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பங்கேற்கவுள்ள குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் கூறுகையில்,‘‘துவக்கத்தில் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பி, சரியாக பயிற்சியில் ஈடுபட மாட்டேன். கடந்த ஒரு ஆண்டில் எல்லாம் மாறி விட்டது. பல்வேறு விஷயங்களை தியாகம் செய்துள்ளேன். எனது குழந்தைகள் வளர்வதை கூட போட்டோக்களில் தான் பார்க்கிறேன். ஏனெனில் அரசும், ஸ்பான்சர்களும் எனக்காக பல கோடிகள் செலவு செய்துள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் டோக்கியோவில் தங்கம் வென்று திரும்புவேன்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *