Share on Social Media


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத்தான், மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிப்படுவார்கள் எனவும் பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த பல வாரங்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தியில் அனுப்பப்பட்ட கடிதம்

இந்நிலையில்தான் இந்தச் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவித்ததோடு, இந்தச் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவும் நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் கருத்துகளை அறியவும், ஆய்வுக்குழுவை அமைத்தது. இன்று நேரிலும் காணொளி மூலமாகவும் விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மின்னஞ்சல் மூலம் விவசாயி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு வந்துள்ள மின்னஞ்சல் கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகியும் வழக்கறிஞருமான வெ.ஜீவக்குமார், “புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, லட்சணக்கான விவசாயிகள் டெல்லியில் எந்தவித சமரசமும் இன்றிப் போராடி வருகிறார்கள். இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுதியான ஒற்றைக் கோரிக்கை.

இந்த மூன்று சட்டங்களை ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பதே தவறான செயல். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், இந்தக் குழு அமைக்கப்பட்டதையே விவசாயிகள் ஏற்கவில்லை. இக்குழுவிலும்கூட நடுநிலையானவர்களோ, விவசாயிகள் நலன்மீது அக்கறைக் கொண்டவர்களோ இடம் பெறவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள்தான் இதில் இடம்பெற்றுள்ளார்கள். இந்நிலையில்தான் இக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மின்னஞ்சலில் அழைப்பு கடிதம் வந்தது. எனக்கும் மின்னஞ்சல் வந்தது.

farmers struggle 6 Tamil News Spot
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இக்கடிதத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் இந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள என்னைப் போன்ற விவசாயிகள், ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டால், தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்பதாலேயே, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு தெரியாத இந்தி மொழியில் கடிதம் அனுப்பியுள்ளார்கள். இந்த ஆய்வுக்குழு கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால், இதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ஆய்வுக்குழு கூட்டத்துக்கான காணொளி இணைப்பைத் தொடர்பு கொண்டேன்.

பல முறை தொடர்புகொண்டும் எனக்கு இணைப்பு கிடைக்கவே இல்லை. உண்மையாகவே விவசாயிகளின் கருத்தை அறிய வேண்டும் என நினைத்திருந்தால், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணையதள வசதியுடன் அரங்கம் ஏற்பாடு செய்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளைக் கலந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். ஆய்வுக்குழு என்பதே ஒரு கண் துடைப்புதான் என்பது இதன் மூலம் உறுதியாகிறது’’ என்றார்.

Protest 1 Tamil News Spot
டெல்லி விவசாயிகள் போராட்டம்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதனிடம் இதுகுறித்து பேசியபோது, “வேளாண் விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு, இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு தனது முடிவை அரசுக்கு அளித்தது. ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவானது, மூன்று வேளாண் சட்டங்களையும் இரண்டு, மூன்று நாள்களிலேயே ஆய்வு செய்து, தனது முடிவை வழங்க முயல்கிறது.

இது மோசடியான செயல். நாடு முழுவதும் விவசாயிகளின் கருத்தை அறிய இந்தக் கால அவகாசம் போதாது. ஆய்வுக்குழு கூட்டத்துக்கு அந்தந்த மாநில மொழிகளில்தான் அழைப்புக் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். ஆய்வுக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே பேசவும் மற்றவர்கள் பேசுவதையும் கூட, தங்களது மொழியிலேயே அறிவதற்கான வசதியும் செய்திருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டங்களில் இத்தகைய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை” என ஆதங்கப்பட்டார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *