Share on Social Media

சவுத்தாம்ப்டன்: ‘‘சவுத்தாம்ப்டனில் வெப்பமான சூழல் காணப்படுவதால் உலக டெஸ்ட் பைனலில், அஷ்வின், ஜடேஜா என இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கலாம்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்கான கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா–சுப்மன் கில் ஜோடி துவக்கம் தர காத்திருக்கிறது.

‘மிடில் ஆர்டரில்’ வழக்கம் போல புஜாரா, கோஹ்லி, ரகானே வருவர். அடுத்து விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் களமிறங்குவார். பந்துவீச்சில் இந்திய அணி நான்கு ‘வேகம்’, ஒரு ‘சுழல்’ அல்லது மூன்று ‘வேகம்’, இரண்டு ‘சுழல்’ என எப்படி களமிறங்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் ஜாம்பவான், உலக டெஸ்ட் பைனல் வர்ணனைக்கு சென்றுள்ள கவாஸ்கர் கூறியது:

கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் ஆடுகளம் எப்படியும் நன்றாக காய்ந்து இருக்கும். போட்டி துவங்கியதும் அடுத்தடுத்த நாட்களில் சுழலுக்கு கைகொடுக்கும். இதனால் இந்திய அணி மூன்று ‘வேகம்’, இரண்டு ‘சுழல்’ என களமிறங்கலாம்.

அஷ்வின், ஜடேஜா என இருவரும் விளையாட வேண்டும். இவர்கள் பவுலிங்கில் மட்டுமன்றி பேட்டிங்கிலும் கைகொடுப்பர். மற்றபடி அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் வானிலை, ஆடுகள சூழ்நிலையை பொறுத்து தான் அமையும்.

இந்திய அணி அனுபவம், இளமை கலந்து காணப்படுகிறது. இதில் பல வீரர்கள், இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இருப்பதால் சிறப்பாக செயல்படலாம். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை, இத்தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்.

2019 உலக கோப்பை தொடரில் கடினமான சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் சதம் அடித்த ரோகித் சர்மா, மீண்டும் சாதிக்க வேண்டும். ரிஷாப் பன்டும் நம்பிக்கை தருகிறார். கோஹ்லி, சுப்மன், புஜாரா கவனமாக விளையாடி போதுமான அளவு ரன்கள் சேர்க்க வேண்டும். இதில் தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

யார் ஆதிக்கம்

ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை ஒருநாள், ‘டுவென்டி–20’, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில், பொதுவான மைதானங்களில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 7 முறை மோதின. இதில் இந்தியா ஒன்றில் மட்டும் (2003 உலக கோப்பை) வென்றது. மற்ற 6ல் நியூசிலாந்து வென்றது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *