Share on Social Media


இந்தியாவில் மொபைல் செயலிகள் மூலம் பண மோசடியில் ஈடுபடும் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எளிய முறையில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற பேராசையே இத்தகைய மோசடிக் கும்பல்கள் உருவாக மூல காரணம். ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் விளம்பரப்படுத்தப்படும் கவர்ச்சியான சலுகைகளைப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே கண்ணை மூடிக்கொண்டு போலி செயலிகளைப் பதிவிறக்கம் செய்துவிடும் இளைஞர்கள், முதலீடு என்ற பெயரில் பெரும் தொகையைச் செலுத்திவிட்டு ஏமாந்துவிடுகின்றனர்.

இந்த வகையில் தலைநகர் டெல்லியில் சைபர் க்ரைம் போலீஸார் சீனாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்கள் சில இந்தியாவில் இயங்கிவருவதாக பயனர்களிடம் காட்டிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுவந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களை ஏமாற்றிப் பணம் பார்க்கும் போலி செயலிகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த பலர் கூகுள் பிளே ஸ்டோரில் ‘Power Bank’ என்ற Online Earning செயலியைத் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவந்திருக்கின்றனர். இந்திய நிறுவனத்தால் இயக்கப்பட்டுவரும் செயலி என்ற போலியான அங்கீகாரத்துடன் பயனர்களின் பயன்பாட்டில் இருக்கும் இந்த மொபைல் செயலியில் 100 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயனர்கள் முதலீடு செய்யலாம். அதன்படி, ஆரம்பத்தில் 100 ரூபாயை முதலீடு செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட கால அளவில் 150 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கிறது. 100-150 ரூபாய் கிடைத்ததும் அடுத்தகட்டமாக 500 ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர். அதற்கும் கணிசமான அளவு கூடுதல் தொகை கிடைத்திருக்கிறது. அதனால் செயலியை முழுமையாக நம்பியவர்கள் ரூ.1,000, 2,000 என அதிக அளவு தொகைகளை முதலீடு செய்து வந்துள்ளனர்.

மேலும், செயலியில் குறைந்தபட்ச withdrawal லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பயனர்களின் முதலீடும், அதற்கான கூடுதல் தொகையும் எடுக்க முடியாமல் அவரவர் கணக்கிலேயே இருந்துள்ளது. இப்படியாகவே 500-க்கு 700, 1,000-க்கு 1,500 எனத் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்துள்ளனர். இந்தநிலையில், குறிப்பிட்ட அளவு தொகையை அவர்கள் முதலீடு செய்ததும், ஒரு கட்டத்தில் செயலியில் அனைவரது கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாகச் செயலியில் வழங்கப்பட்டிருந்த உதவி எண்களை அழைத்தால் அங்கும் பதில் கிடைக்கவில்லை. இந்தச் செயலியின் மூலம் பலரும் குறைந்தபட்சம் 5,000 முதல் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *