Share on Social Media

ENG v IND | ஜோ ரூட்
ENG v IND | ஜோ ரூட்

“நிற்க ஒரு இடம் தாருங்கள், உலகை நகர்த்திக் காட்டுகிறேன்!” – ஆர்க்கிமிடிஸ். “உடன் யாராவது நில்லுங்கள் போதும், போட்டியையே மாற்றிக் காட்டுகிறேன்!” – ஜோ ரூட்.

தனது மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்கால், ரூட், இங்கிலாந்தை முன்னிலை பெற வைக்க, சிராஜ் மற்றும் இஷாந்த் பதிலடி தர, 27 ரன்கள் முன்னிலையோடு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது இங்கிலாந்து.

பிட்சின் ஓரவஞ்சனை

முதல் இரு நாள்கள் ஒத்துழைப்புத் தந்த அளவுக்குக் கூட, மூன்றாவது நாளில் பிட்ச் ஒத்துழைப்புத் தரவில்லை. களமும் காய்ந்து வறண்டிருக்க, ட்யூக்ஸ் பந்துகளை ஸ்விங் ஆக வைக்க காற்றிலும் ஈரப்பதம் இல்லை. சீம் மொமண்டும் அந்தளவு இல்லாததால் இந்திய பௌலர்களின் பாடு திண்டாட்டமானது. இந்திய வீரர்களுக்கு நீண்ட நெடிய நாளாக இது இருக்கப் போகிறது என்பதனை முதல் ஒரு மணி நேர ஆட்டத்திலேயே அடிக்கோடிட்டு காட்டிவிட்டது களம். அதே நேரத்தில், இந்திய பிட்சுகளையும் அஷ்வினையும் நிரம்பவே மிஸ் செய்ய வைத்தன இந்த வறண்ட வானிலையும், மைதானமும்!

ENG v IND

ENG v IND

ஆண்டுகளாகக் காத்திருந்த அரைசதம்!

ரூட்டின் அரைசதமும் நாளின் தொடக்கத்திலேயே வந்து சேர்ந்திருந்தாலும், அது வழக்கமாக நிகழ்வதுதானே என பேர்ஸ்டோ மீதே கண்கள் வட்டமிட்டன. அவர் லிமிடெட் ஓவர் ஃபார்மட்களில் சாதித்த அளவிற்கு ரெட்பால் கிரிக்கெட்டில் எடுபடவில்லை. 2019-ஆம் ஆண்டில், லார்ட்ஸில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த அரை சதத்திற்குப் பின் அவரது இரண்டாண்டுக் காத்திருப்பை இந்தப் போட்டி முடிவுக்குக் கொண்டு வந்தது. 30-களில் தொடர்ந்து ஆட்டமிழந்து கொண்டிருந்த அவர், அதை இப்போட்டியில் அரை சதமாக மாற்றிக் காட்டினார்.

எடுபடாத பந்துவீச்சு

ENG v IND

ENG v IND

பிட்ச் கை கொடுக்கவில்லைதான் என்றாலும், முதல் ஒரு மணி நேரத்தில் இந்திய பௌலர்கள் வீசிய பந்துகளும் ஸ்ட்ரெய்டாகவே சென்று கொண்டிருந்தன. ஸ்லிப்பில் நின்ற ஃபீல்டர்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததைப் போல, எட்ஜாக வைத்து ஆட்டமிழக்க வைப்பதை எல்லாம் தங்கள் சமன்பாட்டில் இருந்தே நீக்கியதைப் போலத்தான் இந்தியப் பந்து வீச்சும் இருந்தது. லெக் சைடிலும், கவரிலும் நிறையவே ரன்களை இந்தியா கசியவிட, ஒருநாள் போட்டிகளில் ஸ்கோர் செய்யும் ரன் ரேட்டோடே இங்கிலாந்து ரன்களைச் சேர்த்தது. ஆனால், உணவு இடைவேளைக்கு முந்தைய ஒரு மணி நேரத்தில், சரியான லைனும், லெந்த்தும் அமைந்து ரிதம் செட் ஆக, இந்திய பௌலர்கள் ரன்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்தத் தொடங்கினர்.

பார்வையாளர்கள் வரம்புமீறல்

சாதித்த வீரர் என்றாலும் சரி, இளம் வீரர் என்றாலும் சரி, பாகுபாடு பார்க்காது எழுந்து நின்று, கைதட்டி வரவேற்கும் முன்னுதாரண செயல்களை பலமுறை இங்கிலாந்து ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்தான். ஆனால், அதேபோல் ஸ்லெட்ஜிங் உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களுக்கும் அவர்களில் சிலர் பிரபலம்தானே?! இப்போட்டியிலும் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த கே எல் ராகுலின் மீது மது பாட்டில்களின் ரப்பர் மூடிகளை எறிந்து அநாகரிக செயல்களில் அவர்கள் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது.

இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம்

ENG v IND

ENG v IND

முதல் செஷனின் முடிவில், சொல்லிக் கொள்ளும்படியாக இந்தியாவால் எதையுமே நிகழ்த்த முடியாமல் போக, விக்கெட்டுகளையும் விடாமல், 97 ரன்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக செஷனையே ஆக்கிரமித்தது இங்கிலாந்து. இது இந்தியாவின் வெற்றி வேட்கையையும், சற்றே அசைத்துப் பார்த்தது. விட்டால், இன்னும் நான்கு செஷன்கள் நிற்போம் என 216/3 என்ற ஸ்கோருடன் வலுவாக இருந்தது இங்கிலாந்து.

சிராஜ் – கேம் சேஞ்சர்

ENG v IND

ENG v IND

ரூட்டை இந்தியாவால் நகரத்தக் கூட முடியாததால், பேர்ஸ்டோதான் அவர்களது இலக்கானார். அந்த நிலையில்தான், உணவு இடைவேளையின் போது, ‘ஷார்ட் பாலே சரணம்’, என்ற மந்திரத்தை மனனம் செய்து வந்ததைப் போல் சிராஜ் தொடர்ந்து பேர்ஸ்டோவிற்கு ஷார்ட் பால்களை கணைகளாக ஏவிக் கொண்டிருந்தார். அடிக்கவும் முடியாத, விடவும் முடியாத லைனில் வந்த பந்துகள் அவரை நிரம்பவே திணறடித்தன. உடலில் எல்லா இடத்திலும் அடிவாங்கிக் கொண்டிருந்தார். இதையே சிராஜ் இரண்டு ஓவர்கள் தொடர்ந்து செய்து, மூன்றாவது ஓவரை ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீச, அதை பேர்ஸ்டோ அடிக்க முயல, அது ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் தஞ்சம் புகுந்தது. புதுப் பந்து எடுக்க, ஒரு ஓவரே எஞ்சியிருந்த நிலையில், இந்த ஷார்ட் பால் ஸ்ட்ராடஜி மூலம் விக்கெட் ஜாக்பாட் அடித்தது இந்தியா.

சதமே சாஸ்வதம்

முதல் செஷனில் 50, இரண்டாவது செஷனில் 100, மூன்றாவது செஷனில் 150 ரன்கள், இதுதான் என் ரூட் என முட்டி மோதி, முன்னேறிக் கொண்டே இருந்தார் ரூட். ஃபாப் 4-யில் தான் இருப்பதற்கான காரணத்தை, இன்னிங்ஸுக்கு ஒருமுறை நிரூபித்து வருகிறார். இந்த வருடம் மட்டும், இது ரூட்டுடைய ஐந்தாவது சதம் என்பதும், அதில் இரண்டு இரட்டைச் சதம் என்பதும், மீதமுள்ள சதங்களும் 180+ கணக்கில் சேர்ந்தவை என்பதும் சொல்லும், அவர் தனது வாழ்நாள் மொத்தத்துக்குமான ஃபார்மில் உள்ளார் என்பதனை!

ENG v IND

ENG v IND

அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ரூட் சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறை என்பதும்தான் தனிச்சிறப்பே. 9000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்த ரூட், அதை அதிவேகமாகக் கடந்த வீரர்களின் பட்டியலிலும் முதல் இடத்தை முற்றுகையிட்டுள்ளார். கடின நேரங்களில் களமிறங்கி ஒற்றை ஆளாக அணியை மீட்டெடுப்பதில் அவருக்கு இணை அவரே! இந்தியாவே களைப்படைந்து, அவரது இருப்பை மறந்து இன்னொரு வீரரை வீழ்த்துவதெப்படி என யோசிக்க ஆரம்பித்துவிட்டது.

பதறவைத்த பார்ட்னர்ஷிப்கள்

தனிப்பெரும் தலைவனாக, ரூட் ராஜ்ஜியத்தையே நிறுவி இருந்தாலும், மூன்றாவது நாளில் முப்படைத் தளபதிகள் போல, பேர்ஸ்டோ, பட்லர், மொயின் அலியுடனான அவரது மூன்று முக்கிய பார்ட்னர்ஷிப்கள்தான் இந்தியாவின் ஸ்கோரையும் தாண்டி இங்கிலாந்தை எடுக்க வைத்தது.

ENG v IND

ENG v IND

இஷாந்த் இரட்டைத் தாக்குதல்!

பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் த்ரூ கொடுத்த இஷாந்த், செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த மொயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தி, அதற்கடுத்த பந்திலேயே சாம் கரணின் விக்கெட்டையும் சாய்த்து, இரட்டை விக்கெட் மெய்டன் ஆக அதை மாற்றினார். இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப்புக்குள் ஊடுருவி, இஷாந்த் இறக்கிய இடிதான் அதற்கடுத்ததாக பௌலர்களை மட்டும் கவனித்தால் போதும் என இந்தியாவின் பணியைச் சுலபமாகக்கியது.

சிராஜும் அம்பயர் கால்களும்

ENG v IND

ENG v IND

விக்கெட் வேட்டைக்காக மட்டுமின்றி, தவறவிட்ட ரிவ்யூக்களுக்காகவும், விக்கெட் வீழ்ந்த பின்னர் அவர் அதனை, வாய் மேல் விரல் வைத்து, கொண்டாடும் விதத்திற்காகவும், முந்தைய நாளில், டிரெண்ட் ஆனார் சிராஜ். மூன்றாவது நாளிலோ, இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமின்றி, அம்பயரையும் மீறி பந்து வீசும் நிலை சிராஜிற்கு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அவர் வீசிய பந்துகளில் ஐந்து அம்பயர் கால் ஆக, அதில் ராபின்சனின் விக்கெட் மட்டுமே, அவருக்குச் சாதகமாக வந்தது. பலமுறை, பேட்ஸ்மேனின் பேடில் பந்தைப் பட வைத்தாலும், அதிர்ஷ்டமும், அம்பயரும் கருணை காட்டத் தவற, ஐந்து விக்கெட் ஹாலை ஒரு விக்கெட்டில் தவறவிட்டார் சிராஜ்.

100 சதங்களுக்கு விதையிட்ட முதல் சம்பவம் - மான்செஸ்டரில் மாயவித்தைக் காட்டிய 17 வயது சச்சின்!

பும்ராவும் நோ பால்களும்

இந்த இன்னிங்க்ஸ் பும்ராவுக்கு ஆஃப் டேயாக மாறி இருந்தது. அணியின் பிரதான பௌலராக இருந்தும், ஒரு விக்கெட்டைக் கூட அவர் வீசிய 156 பந்துகளில் அவரால் எடுக்க முடியவில்லை. ஆனால், அதற்கும் மேலாக அவர் வீசிய 13 நோ பால்கள்தான், மொத்தமாக அவரது பந்து வீச்சு எடுபடாமல் போனதை சுட்டிக் காட்டியது. ஒட்டுமொத்தமாக இந்தியா 33 உதிரிகளை வாரி வழங்க, அதுவே அவர்களுக்கு எதிரிகளாய் மாறி, இங்கிலாந்தை 27 ரன்கள் முன்னிலை பெற வைத்தது.

ENG v IND

ENG v IND

23/2 என அணியின் ஸ்கோர் இருந்த போது, களமிறங்கிய ரூட், இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய போதும், 180 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விட்டிருந்தால், தனது முதல் இரட்டைச் சதத்தை அடித்த அதே லார்ட்ஸில் இன்னொரு இரட்டைச் சதத்தையும் பதிவேற்றி இருப்பார். ரூட்டால் இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா வெர்சஸ் இங்கிலாந்தை, இந்தியா வெர்சஸ் ரூட்டாக மாற்றிக் காட்டிவிட்டார்.

மறுபுறம், இங்கிலாந்தை முன்னிலை பெற அனுமதித்து, இந்தியா வாய்ப்பைத் தவற விட்டது என்றாலும், பௌலர்களுக்குக் கருணையே காட்டாத களத்தில், அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திக் காட்டியுள்ளது இந்தியா என்பதும் கவனத்துக்குரியதே!

களம் மறுபடியும் இந்திய பேட்ஸ்மேன்களின் கையில். ஒப்பற்ற ஓப்பனர்களோடு, மிடில் ஆர்டரும் மீண்டெழுந்து, தங்களது இழந்த மாண்பை மீட்டெடுக்குமா, எழவே விடாது இங்கிலாந்து தாக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். லார்ட்ஸ் பயணம், முடிவை நோக்கிய முன் நகர்வா, முடிவின்றி முற்றுப் பெறும் முடிவிலியா, விடை நான்காவது நாளிடம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *