Share on Social Media


திருப்பூர் : மாவட்டத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிகமாக இருந்தாலும், தொகுதிகளுக்கு தேவையான பணிகளையும், திட்டங்களையும் கேட்டுப்பெறுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது; தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிக்கு என்று மட்டும் அல்லாது, மாவட்டத்தின் ஒட்டுமொத்த நன்மையை கருத்தில் கொண்டு திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும்.

மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரத்தில் தி.மு.க., வேட்பாளர்களும், இதர ஐந்து தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.அரசுடன் இணக்கம் இந்த முறை, கடந்த முறை போன்றே, அ.தி.மு.க., வேட்பாளர்கள் அதிகளவில் வென்றாலும், தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததால், இவர்கள் இந்த முறை எதிர்க்கட்சி வேட்பாளர் களாக இருப்பர்.கடந்த முறை போன்றே, இந்த முறையும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களால், தொகுதிக்கு தேவையான செயல்களை மேற்கொள்வது எளிதாக இருக்க வேண்டும் என்றால், ஆளும், தி.மு.க., அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவையானதாக இருக்கும்.அதேசமயம், தற்போது, தேர்வான மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களால், தொகுதிக்கு தேவையானவற்றை செய்வது எளிதாக இருக்கும்.

அனுபவமே ஆற்றல் : திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள செல்வராஜ், மேயராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். காங்கயம் எம்.எல்.ஏ.,வாக வென்றுள்ள சாமிநாதன், அமைச்சர் பொறுப்பை வகித்தவர். தாராபுரத்தில் வெற்றி பெற்றுள்ள கயல்விழி, புதியவர் என்பதால், அவரும் உற்சாகத்துடன் தொகுதிக்குப் பணிகளை மேற்கொள்ள முடியும். செல்வராஜூம், சாமிநாதனும், கட்சியில் சீனியர்கள் என்ற வகையில், அவர்களது அனுபவம், மாவட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில், கைகொடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி என்று கருதாமல், மாவட்டத்தின் ஒட்டுமொத்த நன்மை கருதி, புதிய பணிகளையும், தேவையானவற்றையும் நிறைவேற்ற உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். மாவட்டம், பிரச்னைகளை எதிர்கொள்ளும்போதோ, நிதி ஒதுக்கீடு அவசியமாக அமையும்போதோ தி.மு.க., – அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுபட்டு களத்தில் இருக்க வேண்டும்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ‘எதிர்க்கட்சியினர் தானே நாம்’ என்ற எண்ணத்தில், தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டுப்பெறுவதிலோ, புதிய பணிகளை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதிலோ, பின்வாங்கிவிட கூடாது; அதேசமயம், அரசுடன் இணக்கமாக இருந்து கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவற்றை முறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வேறு வேறாக இருந்தாலும், ஏற்றுமதி நகரம் என்ற வகையில், மத்திய அரசின் மூலம் திருப்பூருக்கான வளர்ச்சித்திட்டங்களை பெறுவதிலோ, தொழிலுக்கு நெருக்கடிகள் நேரும்போது அவற்றை களைவதிலோ எம்.எல்.ஏ.,க்கள் – எம்.பி., ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டியதும் கட்டாயம்.இருதரப்பு எம்.எல்.ஏ.,க்களுமே பிரச்னைகள் வரும் போது, அதில், ‘அரசியல்’ செய்யாமல், ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *