Share on Social Media


கள்ளக்குறிச்சி-பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தடுக்க, தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏராளமான மாணவர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்சில் பயணம் செய்யும் நிலை உள்ளது.பள்ளி, கல்லுாரி நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.அது மட்டுமின்றி, பஸ்களின் பின்பற ஏணிகளிலும், மேற்கூரையிலும் அமர்ந்து செல்லும் நிலை உள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தடுக்கும் வகையிலும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்கள், பள்ளிகளுக்கு வந்து செல்வதற்கு அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பஸ்சின் படியில் தொங்கியும், பஸ்சின் மேற்கூரை மற்றும் ஏணிப்படியில் தொங்கியபடி ஆபத்தான வகைகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறை, அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தின் போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பஸ் வசதி தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.அதேபோல் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், கொரோனா தொற்று காரணமாக 18 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக சில இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.ஆசிரியர்கள் ஒரு குழு அமைத்து, பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி செல்லா குழந்தைகளின் விபரங்கள் கண்டறிந்துள்ள நிலையில், அக்குழந்தைகளை ஒரு வாரத்திற்குள் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நரிக்குறவர் இன இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சி.இ.ஓ., விஜயலட்சுமி, டி.எஸ்.பி.. ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சிவராமன், உளுந்துார்பேட்டை கார்த்திகா, திருக்கோவிலுார் சுப்ரமணியன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) துரைசாமி, உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்துார்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.