Share on Social Media


நிஜவாழ்க்கையின் அபத்தத் தருணங்கள் ஆரண்ய காண்டத்தில் ஏராளமாக உண்டு. நாம் தெருவில் நடக்கையில் ரூபாய் நோட்டுக்கள் கீழே கிடந்தால் என்ன செய்வோம்? இதேதான் காளையனும் செய்கிறார். அவரிடம் மிகமிகத் தற்செயலாக மாட்டிக்கொள்ளும் சரக்கு இப்படிப்பட்டதே. சொத்துக்களை இழந்து, கடையை இழந்து, இறுதியில் சண்டைக்கோழியும் இறந்துவிட, இனி என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் காளையனிடம்தான் சிங்கப்பெருமாள் தேடும் சரக்கு மாட்டுகிறது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று புலம்பும் காளையனுக்கு இதன்மூலம் மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கிறது.

சிங்கப்பெருமாளிடம் மாட்டிக்கொண்டு புலம்பும் சுப்புதான் இறுதியில் சப்பையை உபயோகித்து ஒரு பெரிய திட்டம் தீட்டுகிறாள். தனது தந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று சிறுவன் கொடுக்காப்புளி எடுக்கும் முடிவுகளும் இப்படிப்பட்டவையே. நண்பர்கள் போன்று பாசத்துடன் பழகும் அடியாட்களுடன் காரில் செல்லும் பசுபதி, சிங்கப்பெருமாள் அவனைக் கொல்லச்சொல்வதை எதேச்சையாக ஃபோனின் லவுட்ஸ்பீக்கரில் கேட்கும் தருணம் எத்தனை அபத்தமானது… ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் கதையே இந்தத் தருணத்தில்தானே துவங்குகிறது?

ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

இத்தகைய நொடிகளை உபயோகப்படுத்திக்கொள்ளும் காளையன், சுப்பு ஆகியோர், நல்லவர்களாக நடந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. மாறாக, ’எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற ஆரண்ய காண்டத்தின் நீதியையே பின்பற்றுகிறார்கள். இந்த வாசகம்தான் படத்தின் துவக்கத்தில் காண்பிக்கப்படுகிறது. இதைப் பின்பற்றியே படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களும் செயல்படுகின்றன. இதையேதான் பசுபதியும் பின்பற்றி, படத்தின் இறுதியில் அனைவரையும் வெல்கிறான்.

இப்படி நல்லவர்களாக நடந்துகொள்ளாத ஆசாமிகளை வைத்துதான் ஸ்கோர்செஸியும் டாரன்டினோவும் படங்கள் எழுதுவது வழக்கம். ஏனெனில் அதுதான் இயல்பு வாழ்க்கையுமே. எப்போதுமே நல்லவன், எப்போதுமே கெட்டவன் என்பவர்களா நாம்? இரண்டின் கலவையும்தானே நமது வாழ்க்கை!

தியாகராஜன் குமாரராஜா எப்போதுமே வசனங்களை சிறப்பாகவே எழுதக்கூடியவர். எப்படி ஸ்கோர்செஸி, டாரன்டினோ படங்களில், கொலையே செய்யச்செல்லும் அடியாட்கள் கூட, அவர்களின் குடும்பக் கஷ்டங்களைப் பேசிக்கொண்டே இயல்பாகச் செல்வார்களோ அப்படிப்பட்ட மிக மிக இயல்பான, நம்மைச்சுற்றிலும் அனைவரும் பேசக்கூடிய – ஏன் – நாமே அவ்வப்போது பேசக்கூடிய வசனங்களே இந்தப் படத்திலும் முழுக்க வருகின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *