Share on Social Media


ஆப்கான்: ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், தங்கள் கொடியை பறக்க விட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மற்றும் அரசு படைகளுக்கு இடையே 20 ஆண்டுகளாக உள் யுத்தம் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பக்ரம் விமான தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது.

இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர். இந்நிலையில், பாகிஸ்தானின் சாமன் நகருக்கு எதிரே உள்ள ஆப்கானிஸ்தானின் வெஷ் நகரில் உள்ள எல்லையை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் ஆப்கானிஸ்தான் கொடியை விட உயரத்தில் தலிபான் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் கைப்பாவைகளின் கொடூரத்தின் 2 தசாப்தங்களுக்கு பிறகு, இந்த வாயில் மற்றும் ஸ்பின் போல்டாக் மாவட்டம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டன என்று ஒருவர் கேமரா முன்பு கூறுகிறார்.

தற்போது தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படும் பகுதி இரு நாட்டுக்கு இடையேயான எல்லை பகுதியாக இருந்து வருகிறது. இதன் வழியாகதான் முக்கிய போக்குவரத்துகள் நிகழ்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 900 டிரக்குகள் இந்த பாதையை கடக்கின்றன. இந்த பகுதி தற்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆப்கான் படைகள் கூறும் நிலையில், தலிபான்களின் கையே ஓங்கியுள்ளதாக குடிமக்கள் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *