Share on Social Media


இந்தியாவின் சுகாதார கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழ்நாடு என்பது நாம் செய்தியாகக் கடந்து செல்லும் ஒன்று. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள். அங்கன்வாடி மையங்கள் இப்படியாக மக்கள் தொகை அடிப்படையிலும், குறிப்பிட்ட இடைவெளியிலும் உருவாகியுள்ளது தமிழ் நாட்டின் சுகாதார கட்டமைப்பு. இதில் என் தனிப்பட்ட அனுபவம் ஒன்று உண்டு… அது மலைகளின் அரசியாம் உதகமண்டலத்தில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ சேவை.

வழக்கமாக ஐந்தாயிரம் மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும். உதகமண்டலத்தில் கேரள-தமிழ்நாடு எல்லையில் தேயிலை தோட்டங்கள்சூழ மலைப்பாங்கான இடத்தில் கொலக்கம்பை என்ற ஆரம்ப சுகாதார நிலையம். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு பத்து துணை சுகாதார நிலையங்கள். அப்படியான பத்து துணை சுகாதார நிலையங்களில் ஒன்று ‘ஆனைப்பள்ளம்’ எனும் துணை சுகாதார நிலையம். இந்தத் துணை சுகாதார நிலையத்தின் மொத்த மக்கள் தொகை 500 மட்டுமே. அந்த 500 நபர்களும் 20 முதல் 50 வரை தனித்தனியாக இருப்பார்கள். மலையின் உச்சியில் சமதளமாக உள்ள பகுதியைத் தாண்டி, சுமாராக பத்து-பதினைந்து கிலோமீட்டர் மலை இறக்கத்தில் இறங்கினால் ஆனைப்பள்ளம் துணை சுகாதார நிலைய பகுதியை அடையலாம்.

ஆனைப்பள்ளம்
download 1 Tamil News Spot
ஆனைப்பள்ளம்
images 3 Tamil News Spot
ஆனைப்பள்ளம்
images 4 Tamil News Spot
ஆனைப்பள்ளம்

பழங்குடியின மக்களுக்கான சிறிய குடியிருப்புகள். அந்த மக்களின் குழந்தைகள் பயில அங்கேயே உண்டு உறைவிட பள்ளி. ஆனைப்பள்ளம் பள்ளியில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் உணவுக்கான அரிசி உள்ளிட்ட பொருட்களைச் சிறுசிறு மூட்டைகளாகக் கழுதைகளில் கட்டி எடுத்துச் செல்ல வேண்டும். திங்களன்று காலையில் ஆனைப்பள்ளம் செல்லும் ஆசிரியர்கள் வெள்ளி மாலையில் திரும்புவார்கள்.

அங்குள்ள மாணவர்களுக்கான நலக்கல்வி, கல்வி போன்றவற்றை கற்றுத்தர பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்களின் உலகம் வேறு. இன்று நம் அருகில் உள்ள குழந்தைகள் அலைபேசி, டிவி ரிமோட், டோரா புஜ்ஜி, சோட்டாபீம் என அடடே அப்டேட்டாக இருப்பார்கள். ஆனைப்பள்ளம் துணை சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட உண்டு உறைவிட பள்ளி மாணவர்களோ, மின்சார வசதி ஏதுமற்ற இடத்தில் வசிப்பவர்கள், வாழ்பவர்கள். உண்டு உறைவிட பள்ளி மட்டும்தான் அவர்களின் உலகம். அந்த மாணவர்களுக்கான நலக்கல்வி வழங்குகையில் நமது சமகால உலகை விவரிக்கும் முயற்சி அலாதியான அனுபவம். நம் குழந்தைகளுக்கு இன்று மின்தடை ஏற்பட்ட அடுத்த நொடியே யுபிஎஸ் மூலம் அதே உலகத்தைத் திருப்பித் தந்து விடுவோமே. ஆனால், அங்கு அப்படியல்ல.

தொலைக்காட்சி, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றை கண்களில் காணாத அவர்களுடைய வாழ்வு அங்கே செல்லும் நமக்கு வேறு ஒன்றாக உணரக்கூடும். மின் வசதியே இல்லாத அவர்களுக்கு நாம் வெளி உலகில் கண்டவற்றை உணரவைக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.

நமது வீடுகளின் முன்பாக மலர்ச்செடிகள் உள்ளதைப் போன்று அவர்களுடைய குடியிருப்புகளின் முன்பாக உள்ள செடிகளில் பிரியாணி இலை எனப்படும் ‘BAY LEAF’ செடிகள் இருக்கும், கிராம்பு காய்த்து இருக்கும். அவர்கள் வளர்க்கும் நாய்கள்கூட பலா பழத்தை வெட்டிப் போட்டால் நன்றாகக் கடித்துத் தின்னும். வீட்டின் முன்பாக உள்ள மரங்களில் மிளகுக் கொடிகள் மிளகு காய்களுடன் படர்ந்து இருக்கும்.

20211130 184011 Tamil News Spot
ஆனைப்பள்ளம்

உதகைக்கு செல்வதற்கு கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் என இர‌ண்டு மலைப்பாதைகள் வாகன போக்குவரத்து வசதிமிக்கதாக உள்ளன. அந்த ஆனைப்பள்ளம் மலைவாழிடத்திலிருந்து மலைப்பாதை வழியாக உண்டு உறைவிட பள்ளிக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கழுதைகள் பயணிக்கும் பாதை வழியாக மேலே ஏறி அவ்வப்போது குன்னூர் பகுதிக்கு வந்து செல்லும் நபர்கள்தாம் ஆனைப்பள்ளம் மலைக்கிராமத்துக்கு நாட்டு நடப்பை விவரிக்கும் செய்தியாளர்கள். அவர்களில் ஒரு சிலர் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பேசுவார்கள். அவர்களுக்கும் சுகாதார நலக்கல்வி கொடுக்கக் கேட்டுக் கொள்வார்கள்.

உதகை நகர் செல்ல மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி ஆகிய இரு பாதைகளைத் தவிர்த்து மேட்டுப்பாளையத்திலிருந்து இந்த ஆனைப்பள்ளம் வழியாக ஒரு பாதையை அமைக்க வேண்டுமெனவும், அவ்வாறு அமைக்கப்பட்டால் அங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கையே மாறி விடும் எனவும் கூறுவார்கள்.

20211130 184157 Tamil News Spot
ஆனைப்பள்ளம்

மருந்து, மாத்திரைகள், மற்றும் பல மருத்துவப் பொருட்களைக் கழுதைகளின்மீது கட்டி யானைகள் உலவும் ஆனைப்பள்ளம் துணை சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட மக்களுக்கு சேவை செய்தது, என் வாழ்வில் வேறுபட்ட அற்புதமான அனுபவம்!

(வீ.வைகை சுரேஷ் – சுகாதார ஆய்வாளர்)Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.